வீட்டிலேயே ஹேர் கலரிங் செய்யணுமா? இந்த கிச்சன் பொருட்களை யூஸ் பண்ணுங்க...

post-img

நரைமுடியாது வயதான தோற்றத்தைத் தருவதால், நிறைய பேர் தங்கள் தலைமுடியை கலரிங் செய்கிறார்கள்.

அதுவும் கெமிக்கல் கலந்த பொருட்களைக் கொண்டு தங்கள் தலைமுடியை கலரிங் செய்கிறார்கள். ஆனால் இப்படி கெமிக்கல் கலந்த பொருட்களால் கலரிங் செய்தால், அது தலைமுடியின் ஆரோக்கியத்தை கெடுப்பதோடு, தலைமுடியை அதிகம் உதிரச் செய்யும்.

இதைத் தவிர்க்க வேண்டுமானால், இயற்கை பொருட்களைக் கொண்டு கலரிங் செய்வதே சிறந்தது. சரி, இயற்கை பொருட்களால் தலைமுடிக்கு கலரிங் செய்ய முடியுமா என்று பலரும் கேட்கலாம். நிச்சயம் முடியும்.

பாரம்பரியமாக தலைமுடியை ப்ரௌன் நிறத்தில் மாற்றுவதற்கு ஹென்னா என்னும் மருதாணிப் பொடியை நீரில் கலந்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை தலைமுடியில் தடவி நன்கு காய்ந்த பின் அலசுவோம்.

ஆனால் நம் வீட்டின் சமையலறையில் உள்ள வேறு சில பொருட்களும் தலைமுடியின் நிறத்தை மாற்ற உதவி புரியும். கீழே இயற்கை வழியில் ஹேர் கலரிங் செய்வது எப்படி என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் உங்களுக்கு ஏற்றதை பின்பற்றுங்கள்.

காபி

அனைவரது வீட்டிலும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பொருள் தான் காபி. இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் டெர்மட்டாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், காபி மயிர்கால்களின் வளர்ச்சியைத் தூண்டிவிட்டு, தலை முடியை வேகமாக வளரச் செய்வது தெரிய வந்துள்ளது. காபியில் முடிக்கு நல்ல பளபளப்பைத் தரும் பண்புகள் உள்ளன. மேலும் இது தலைமுடிக்கு நல்ல ப்ரௌன் நிறத்தை அளிப்பதோடு, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.

பயன்படுத்தும் முறை :

முதலில் ஒரு பௌலில் நல்ல ஸ்ட்ராங் காபி பொடியை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதில் ஏதாவது ஒரு கண்டிஷனரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ஸ்ட்ராங் காபி தூளை சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும். 

பின்பு அந்த கலவையை தலைமுடியில் தடவி 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். 

நன்கு காய்ந்த பின், குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும். முக்கியமாக ஷாம்பு பயன்படுத்திவிடக்கூடாது. 

இந்த முறையால் தலைமுடி நல்ல ப்ரௌன் நிறத்தில் மாறும்.

எலுமிச்சை

எலுமிச்சை தலைமுடியை கலரிங் செய்வதைத் தவிர, தலைமுடியில் படிந்துள்ள தீங்குவிளைவிக்கும் பொருட்களை நீக்கி, முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. முக்கியமாக இது முடியில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்குகிறது. தலையில் பொடுகு இருந்தால், அதை நீக்கவும் எலுமிச்சை உதவி புரிகிறது. இப்படிப்பட்ட எலுமிச்சையைக் கொண்டு தலைமுடியின் நிறத்தை மாற்ற நினைத்தால் பின்வருமாறு செய்ய வேண்டும்.

பயன்படுத்தும் முறை

முதலில் முடியின் நீளத்திற்கு ஏற்ப 4-6 எலுமிச்சைகளை எடுத்து, அதன் சாற்றினை பிழிந்து கொள்ள வேண்டும். 

பின் அந்த சாற்றினை வடிகட்டி, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும். 

பின்பு அந்த சாற்றினை தலைமுடியில் ஸ்ப்ரே செய்து, சூரிய ஒளியில் 1 மணிநேரம் நின்று உலர்த்த வேண்டும். 

அதன் பின் குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.

தக்காளி

வீட்டு சமையலறையில் அவசியம் இருக்கும் ஒரு முக்கியமான பொருள் தான் தக்காளி. என்ன தான் தக்காளி அடர் சிவப்பு நிறத்தில் கண்ணை பறிக்கும் வகையில் இருந்தாலும், இதுவும் தலைமுடிக்கு கலரிங் செய்ய பெரிதும் உதவி புரிகிறது.

பயன்படுத்தும் முறை

முதலில் தலைமுடியின் நீளத்திற்கு ஏற்ப தக்காளிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். 

பின் அந்த தக்காளிகளை நன்கு மென்மையாக மசித்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் மசித்த தக்காளியை தலைமுடியில் தடவி 1-3 மணிநேரம் சூரிய ஒளியில் உலர்த்த வேண்டும்.

அதன் பின் குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.

பீட்ரூட்

பீட்ரூட்டின் நிறமே கண்ணைப் பறிக்கும் வகையில் அட்டகாசமாக இருக்கும். பீட்ரூட் தலைமுடிக்கு நல்ல நிறத்தைத் தருவதோடு, அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்றவை இருப்பதால், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும்.

பயன்படுத்தும் முறை 

முதலில் தலைமுடியின் நீளத்திற்கு ஏற்ப பீட்ரூட்டை எடுத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதை தலைமுடியில் தடவி தேவையான நிறத்திற்கு ஏற்ப சூரிய ஒளியில் 1-3 மணிநேரம் காய வைக்க வேண்டும். 

பின்பு குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிகள் முற்றிலும் இயற்கை பொருட்களால் கலரிங் செய்யப்படுவதால், எவ்வித பக்கவிளைவுகளும் இருக்காது. நீங்கள் இதுவரை கெமிக்கல் பொருட்களால் கலரிங் செய்து வந்தால், இந்த இயற்கை வழிகளை ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள். நிச்சயம் நீங்கள் எதிர்பார்த்த நிறத்தைப் பெறலாம்.


Related Post