தென்னிந்தியாவில் சாம்பார் மிகவும் பிரபலமான உணவு. மேலும் இது சாத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்ற அற்புதமாக இருக்கும். இந்த சாம்பாரை இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதத்தில் சமைப்பார்கள். குறிப்பாக கர்நாடகாவை எடுத்துக் கொண்டால், அங்கு சாம்பார் இனிப்புச் சுவையுடன் இருக்கும். இந்த வகை சாம்பார் சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
உங்கள் வீட்டில் உள்ளோருக்கு கர்நாடகா ஸ்டைல் சாம்பார் பிடிக்குமா? அப்படியானால் அவர்களுக்கு வீட்டில் கத்திரிக்காய் முருங்கைக்காய் கொண்டு கர்நாடகா ஸ்டைல் சாம்பார் செய்து கொடுங்கள். இந்த வகை சம்பார் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். உங்களுக்கு கர்நாடகா ஸ்டைல் சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே கர்நாடகா ஸ்டைல் சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் - 5-6
முருங்கைக்காய் - 2
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1 (நறுக்கியது)
துவரம் பருப்பு - 1/2 கப்
துருவிய தேங்காய் - 1/4 கப்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
வெல்லம் - 1 நெல்லிக்காய் அளவு
புளி - சிறிது (நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்)
உப்பு - சுவைக்கேற்ப வறுத்து அரைப்பதற்கு..
மல்லி - 1 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1/4 டீஸ்பூன்
அரிசி - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 5-10 (காரத்திற்கு ஏற்ப) தாளிப்பதற்கு...
நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன் + 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது செய்முறை:
முதலில் முருங்கைக்காயை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். அதேப் போல் கத்திரிக்காயையும் வெட்டி, நீரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
பின்பு சின்ன வெங்காயத்தை தோலுரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு துவரம் பருப்பை கழுவி, குக்கரில் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, 2 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை மசித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் முருங்கைக்காயைப் போட்டு சிறிது நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, முருங்கைக்காயை வேக வைக்க வேண்டும். முருங்கைக்காய் 50 சதவீதம் வெந்ததும், அதில் கத்திரிக்காய், தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து, 5-10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
அதே சமயம் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து குறைவான தீயில் வைத்து, பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் தேங்காய், புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
காய்கறிகள் வெந்ததும், அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பு, அரைத்த மசாலா, வெல்லம் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கிளறி, குறைவான தீயில் வைத்து நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
இறுதியாக ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சாம்பரில் ஊற்றினால், சுவையான கர்நாடகா ஸ்டைல் சாம்பார் தயார்.