மெட்டா (Meta) நிறுவனம் லாபத்திற்காக குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்களை பெற்றோருக்கு விற்பனை செய்துவருவதாக அமெரிக்காவின் ஃபெடரல் டிரேட் கமிஷன் (Federal Trade Commission) கடுமையான குற்றச்சாட்டை வைத்துள்ளது. இதுபோன்ற செயல் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையேயான உறவை சீர்குலைக்கும் என்றும், குழந்தைகளின் எதிர்காலத்துக்கு இது நல்லதல்ல என்றும் விமர்சனம் செய்துள்ளது.
நாம் வாழும் டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதிலேயே அதிக நேரம் செலவாகிறது. குறிப்பாக, பேஸ்புக் (Facebook), ட்விட்டர் (Twitter ), வாட்ஸ்அப் (WhatsApp), மெசேன்ஜர் (Messenger) போன்ற ஆப்ஸ்களை ஒருநாளைக்கு குறைந்தது 1 மணி நேரமாவது பயன்படுத்தவில்லை என்றால் அன்றைய நாளே சிலருக்கு ஓடாது. இன்னும், சிலர் அதிலேயே அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.
இந்த தாக்கம் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் சமூக ஊடகங்களை பயன்படுத்த தூண்டுதலாக அமைந்துவிட்டது. இதனால், குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த ஆப்ஸ் நிறுவனங்கள் அனுமதி வழங்கக்கூடாது என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கைகள் வைத்து வருகின்றனர்.
இதனடிப்படையில் மெட்டா நிறுவனம் தனது மெசேன்ஜர் கிட்ஸ் (Messenger Kids) ஆப்-பை 2017ஆம் ஆண்டு வடிவமைத்தது. இதில் பல்வேறு தனியுரிமை கொள்களைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கொண்டுவந்தது. இந்த ஆப்-பை 13 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் மெசேஜ், வீடியோ கால் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் கொடுக்கப்பட்டிருக்கும்.
ஆனால், இந்த மெசேன்ஜர் கிட்ஸ் ஆப்-பும், அதை பயன்படுத்தும் குழந்தைகளின் பெற்றோரின் ஃபோஸ்புக் ஆப்-பும் இணைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம், பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் யாருடன் பேசுகிறார்கள், வீடியோ கால் அல்லது மெசேஜ் அனுப்புகிறார்கள். யாருடன் அதிக நேரம் தொடர்பில் இருந்திருக்கிறார்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள முடியும்.
ஆரம்பத்தில், இந்த மெசேன்ஜர் கிட்ஸ் ஆப்-புக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும், இப்போது எதிர்ப்பு கிளம்பிவருகிறது. அந்த வரிசையில், அமெரிக்காவின் ஃபெடரல் டிரேட் கமிஷன் (Federal Trade Commission) மெட்டா நிறுவனத்தை கடுமையாக தாக்கி கருத்து தெரிவித்துள்ளது. அதில், மெட்டா நிறுவனத்தின் மெசேன்ஜர் கிட்ஸ் அதன் தனியுரிமை கொள்கைகளை மீறிவருகிறது.
குழந்தைகளை வேவு பார்க்கும் நிலைக்கு பெற்றோர்களை தள்ளுகிறது. இது குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையேயான உறவை சீர்குலைக்கும். இதுபோன்ற நடவடிக்கையை மெட்டா உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். குழந்தைகளை ஆபத்தில் தள்ளும் முயற்சிகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
இதற்கு மெட்டா தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது மெட்டா, "ஃபெடரல் டிரேட் கமிஷனின் கருத்தானது ஒரு அரசியல் ஸ்டண்ட் (Political Stunt) ஆகும். எங்கள் நிறுவனத்துக்கும் ஃபெடரல் டிரேட் கமிஷனுக்கும் இடையே ஒப்பந்தம் இருக்கிறது. இருப்பினும், அவர்கள் எங்களை முறையாக அணுகி மெசேன்ஜர் கிட்ஸ் குறித்து எந்த கேள்வியையும் கேட்கவில்லை. இப்போது கேட்கிறார்கள்" என்று தெரிவித்திருந்தது.