பக்ரீத் ஸ்பெஷல் ஷீர் குருமா செய்வது எப்படி..? இதோ உங்களுக்கான ரெசிபி!

post-img

பக்ரீத் எனப்படும் ஹஜ் பெருநாளை கொண்டாட இஸ்லாமியர்கள் தயாராக உள்ளனர். பக்ரீத் அல்லது ஈத்-அல்-ஆதா என்பது உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் தியாகத் திருநாளாகும்.

பாரம்பரிய ஆட்டிறைச்சி உணவு மற்றும் இனிப்பு இல்லாமல் இந்த பண்டிகை முழுமையடையாது. அந்தவகையில், பக்ரீத் ஸ்பெஷல் ஷீர் குருமா செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

முழு கொழுப்புள்ள பால் - 1 லிட்டர்.

சேமியா - 1/3 கப்.

பேரிச்சம் பழம் - 10.

முந்திரி பருப்பு - 1/4 கப் நறுக்கியது.

பாதாம் பருப்பு - 1/4 கப் மெல்லியதாக நறுக்கியது.

பிஸ்தா - 2 ஸ்பூன் நறுக்கியது.

சாரை பருப்பு - 1 ஸ்பூன்.

காய்ந்த திராட்சை - 5.

சர்க்கரை - 1/4 கப்.

ஏலக்காய் தூள் - 1/4 ஸ்பூன்.

ரோஸ் எசென்ஸ் - 2 சொட்டு.

நெய் - தேவையான அளவு.

 

செய்முறை :

முதலில், கடாயில் நெய் ஊற்றி அதில் சேமியாவை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து பின்பு தனியாக எடுத்து வைக்கவும்.

இதை அடுத்து அதே கடாயில் நெய் ஊற்றி அதில் நறுக்கிய பேரிச்சம் பழம் சேர்த்து 3 நிமிடம் வறுத்து பின்பு தனியாக எடுத்து வைக்கவும்.

இப்போது, அதே கடாயில் நெய் ஊற்றி அதில் நறுக்கிய முந்திரி பருப்பு, பாதாம், பிஸ்தா, சாரை பருப்பு சேர்த்து 4 நிமிடம் மிதமான தீயில் வறுத்து பின்பு தனியாக எடுத்து வைக்கவும்.

பின்பு அதே கடாயில் நெய் ஊற்றி அதில் காய்ந்த திராட்சை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

அடுத்து நல்ல அகலமான பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் வறுத்த சேமியாவை சேர்த்து கலந்துவிடவும்.

சேமியா வெந்ததும் அதில் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின்பு ஏலக்காய் தூள், ரோஸ் எசென்ஸ், வறுத்த பேரிச்சம் பழம் சேர்த்து கலந்து கொள்ளவும்.

அடுத்து வறுத்த பருப்பு மற்றும் திராட்சையை சேர்த்து கலந்துவிட்டு 3 நிமிடம் குறைந்த தீயில் வேகவிட ஷீர் குருமா தயார்.

 

Related Post