சென்னை: இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் ரத்தசோகை நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இரும்புச்சத்து குறைபாடு காரணமாக உடம்பில் பல பகுதிகளுக்கும் ஆக்ஸிஜன் கொண்டு செல்லப்படுவது தடைபடுகிறது. ஒருவரை பலவீனமாகவும் சோர்வாகவும் உணர வைக்கிறது. இரத்த சோகையில் பல்வேறு வகைகள் உள்ளன. இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் இரத்த சோகை முக்கியமாக பெண்களை பாதிக்கிறது. ரத்த சோகையை தடுக்க என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இரும்பு சத்தை பயன்படுத்தி தான் நம் உடல் நுரையீரலில் இருந்து உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜனை ஹீமோகுளோபின் எடுத்துச் செல்லும்.
மேலும் தசைகளுக்கு ஆக்ஸிஜனை வழங்கும் புரதமான மயோகுளோபினுக்கும் போதுமான இரும்பு சத்து தேவைப்படுகிறது. ஹீமோகுளோபின் என்பது ஒரு புரதம், இரத்த சிவப்பணுக்களின் மிகவும் அவசியமான ஒரு அங்கமாகும். அதிரும் மும்பை உடல் முழுவதும் உள்ள உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் சென்று வழங்குவது ஹீமோகுளோபின்தான். நம் உடலில் போதுமான அளவு ஹீமோகுளோபின் இல்லை என்றால், நம் திசுக்கள் மற்றும் தசைகள் திறம்பட வேலை செய்ய போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காது. இது ரத்த சோகை ஏற்பட காரணமாகிறது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, உலகெங்கிலும் சுமார் இரண்டு பில்லியன் மக்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது உலகளவில் மிகவும் பொதுவான ஊட்டச்சத்துக் கோளாறு ஆகும். உலகளவில் 5 வயதிற்குட்பட்ட 42% குழந்தைகளும், 40% கர்ப்பிணிப் பெண்களும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்த சோகையின் மற்றொரு வடிவம் அப்லாஸ்டிக் அனீமியா. இது ரத்த சோகையின் மிகவும் கடுமையான மற்றும் அசாதாரணமான வடிவமாகும்,
இது உடலில் போதுமான இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய முடியாதபோது ஏற்படுகிறது. நோய்த்தொற்றுகள், ஆட்டோ இம்யூன் கோளாறுகள் மற்றும் சில மருந்துகள் இந்த வகையான இரத்த சோகையை ஏற்படுத்தும். உங்கள் இதயத் துடிப்பில் ஏற்படும் மாற்றங்கள் இரத்த சோகையின் அறிகுறியாக இருக்கலாம். சாதாரணமாக நடந்தாலே மூச்சுத் திணறல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் குறைபாட்டை சரி செய்ய இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம். கீரைகள் மற்றும் பச்சை காய்கறிகள், பருப்பு வகைகள், பீன்ஸ், இரும்புச்சத்து நிறைந்த தானியங்கள் மற்றும் பல உலர்பழங்களை சாப்பிடலாம்.
வேர்க்கடலை, பழங்கள், சிறுநீரக பீன்ஸ், பச்சை இலை காய்கறிகள் மற்றும் தானியங்களில் ஃபோலிக் அமிலங்கள் கிடைக்கிறது. தினசரி உணவில் இவற்றை சேர்த்துக்கொள்ளலாம். ஹீமோகுளோபின் உற்பத்திக்கு வைட்டமின் சி அவசியம். எலுமிச்சை, நெல்லிக்காய், ஆரஞ்ச் போன்ற பழங்கள், தக்காளி, ஸ்ட்ராபெர்ரி, முலாம்பழம் மற்றும் மிளகுத்தூள் போன்றவைகளை அன்றாட உணவுகளில் சாப்பிடலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்களை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ரத்த சோகை குறைபாட்டினை தடுக்கலாம். முருங்கை கீரையில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த சோகை, இருதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், ஜீரணக் கோளாறு உள்ளிட்டவற்றைக் குணப்படுத்தும்.
கால்சியம், பொட்டாசியம் , வைட்டமின் ஏ, சி ஆகியவை முருங்கை கீரையில் நிறைந்திருக்கின்றன. ஆரம்ப காலத்திலேயே சர்க்கரை நோய் அறிகுறிகளில் இருந்து முற்றிலும் காப்பாற்றும்.100 கிராம் முருங்கை கீரையில் இரும்புச்சத்து-28 மி.கி.,502 மைக்ரோ கிராம் போலிக் அமிலம்,0.64 மி.கி வைட்டமின் B12 ஆகிய சத்துக்கள் உள்ளன. கறிவேப்பிலையில் அதிக அளவில் இரும்பு சத்து போலிக் ஆசிட் நிறைந்து இருக்கிறது. இந்த போலிக் ஆசிட் என்பது முக்கியமாக உடலில் உள்ள இரும்புச் சத்தை ஈர்ப்பதற்கு உதவி செய்யும். கருவேப்பிலை சர்க்கரையின் அளவை ரத்தத்தில் சீராக வைத்திருக்க உதவுகிறது. 100 கிராம் கருவேப்பிலையில் இரும்புச்சத்து 8.67 மி.கி.,117 மைக்ரோகிராம் போலிக் அமிலம்,வைட்டமின் B12 உள்ளது. கர்ப்பிணிகள் இந்த உணவுகளை தவறாமல் சாப்பிடுவதன் மூலம் ரத்த சோகையில் இருந்து தப்பிக்கலாம். பிறக்கும் குழந்தைகள் பிறவி ஊனம் ஏற்படாமல் தப்பிக்கலாம்.