உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பும் ஒவ்வொருவரும் பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருவார்கள். குறிப்பாக தினசரி உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுகள் என்று உடல் எடையை குறைக்க ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து, பார்த்து செய்வார்கள்.
அதே சமயம் சில வகை உணவுகள் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அவற்றை எடுத்துக் கொள்வார்கள் அல்லது பசி நேரத்தில் எதையாவது சாப்பிட வேண்டுமே என்ற எண்ணத்தில் சில உணவுகளை எடுத்துக் கொள்வார்கள். இவை நமக்கே தெரியாமல் நம் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
ஃப்ரெஷ் ஜூஸ்
பழங்கள் ஆரோக்கியமானவை தான். அவற்றை நாம் நேரடியாக சாப்பிடும் போது உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். ஆனால் அதையே ஜூஸ் வடிவில் எடுத்துக் கொள்ளும்போது நம் உடலுக்கு தேவையற்ற கலோரிகள் சேர்ந்து அதுவே உடல் எடை அதிகரிக்க காரணமாக அமையும்.
சிப்ஸ்
டிவியில் நமக்கு பிடித்தமான நிகழ்ச்சிகளை பார்க்கும்போது அல்லது விளையாட்டுப் போட்டிகளை பார்க்கும்போது கையில் கொஞ்சம் சிப்ஸ்களை வைத்து கொரித்துக் கொண்டே சாப்பிடுவது எல்லோருக்கும் பிடித்தமானது. ஆனால் இது நம் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் என்பதை பலரும் மறந்து விடுவார்கள்.
சோடா
வெளியிடங்களுக்கு செல்லும்போது தாகத்தின் மிகுதியில் குளிர்ச்சியாக ஒரு சோடா அருந்துவது நமக்கு பிடித்தமானதாக இருக்கலாம். ஆனால் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற நம் முயற்சிக்கு இது தடைக்கல்லாக அமையும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
செயற்கை இனிப்பூட்டி
நாம் ஆசையோடு வாங்கி சாப்பிடும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் துரித உணவுகள் பலவற்றில் செயற்கையான இனிப்பூட்டிகள் சேர்க்கப்பட்டிருக்கும். நமக்கே தெரியாமல் எடுத்துக் கொள்ளும் இந்த இனிப்புகள் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
ஃப்ளேவர்ட் யோகர்ட்
நீங்கள் தயிர் பிரியராக இருக்கும் பட்சத்தில் வீட்டில் தயார் செய்யப்பட்ட தயிரை சாப்பிடுவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் செயற்கை ஃப்ளேவர் சேர்க்கப்பட்ட தயிர் மற்றும் யோகர்ட் வாங்கி சாப்பிட்டால் அது உடல் எடையை அதிகரிக்கும்.
புரோட்டின் பார்ஸ்
புரத சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் புரோட்டின் பார்ட்ஸ் எடுத்துக் கொள்வது நம் வழக்கமாக இருந்தாலும் அவற்றில் மிகுதியான கலோரிகள் மற்றும் தேவையற்ற இனிப்புகள் சேர்க்கப்பட்டிருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.
நொறுவைகள்
தானியங்கள் ஆரோக்கியமானவை தான். ஆனால் எண்ணெயில் வறுக்கப்பட்ட தானியங்களை நொறுவையாக எடுத்துக் கொண்டால் அது உடல் எடை அதிகரிக்க காரணமாக அமையும்.
பீனட் பட்டர்
உணவுகளில் சுவை ஊட்டுவதற்காக பேக்கேஜ்ட் டயட் பீனட் பட்டர் சேர்க்கும் வழக்கம் இருக்கிறது. அது எந்த அளவுக்கு சுவையை அதிகரிக்கிறதோ அந்த அளவுக்கு உடல் எடையை அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஸ்மூத்தி
நாம் ஆசையோடு வாங்கி அருந்தும் இந்த பானங்களில் மிக அதிக அளவில் செயற்கை இனிப்பூட்டிகள் சேர்க்கப்பட்டிருக்கும். இதை அறியாமல் நாம் இதை அருந்துவதால் உடல் எடை குறைக்கும் முயற்சிக்கு தடையாக அமையும்.