டை இல்லாமல் நரை முடியை இயற்கையாகவே கருமை நிறத்தில் மாற்ற டிப்ஸ்..!

post-img

என்ன காரணங்களுக்காக முடி நரைக்கத் துவங்குகிறது, நரை முடியை கருமையாக்க முடியுமா, ஆகியவைப் பற்றி டெர்மா மிராக்கிள் கிளினிக்கின் நிறுவனர் மற்றும் இயக்குனரான மருத்துவர் நவ்நீத் ஹரோர் பகிர்ந்துள்ளார்.

ஒருவருக்கு வயதாகும் அறிகுறிகளை அவருடைய முகத்தில் ஏற்படும் மாற்றங்களை வைத்து கண்டுபிடிக்க முடியும். சுருக்கம், சருமம் தொய்வடைதல் அல்லது தளர்தல் மற்றும் முடி நரைக்கத் தொங்குவது ஆகிய மூன்றுமே வயதாகும் அறிகுறிகளாகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இந்த மாற்றங்கள் பாதிப்பை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி ஒரு சிலருக்கு மன அழுத்தம் காரணமாக இளம் வயதிலேயே முடி நரைக்கத் தொடங்கும். ஒரு சிலருக்கு அவர்களின் பரம்பரை அல்லது டிஎன்ஏ கூறுகள் காரணமாக முடி நரைக்கலாம். இவை அல்லாமல், போதிய உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை ஆகியவற்றாலும் வயதாகும் அறிகுறிகள் தோன்றலாம்.

                             

இளம் வயதிலேயே ஏன் முடி நரைக்கத் தொடங்குகிறது

மேலே கூறியுள்ளது, இளம் வயதிலேயே நரை தோன்றுவதற்கு பல காரணங்கள் உள்ளன.

பரம்பரை ரீதியான பாதிப்பு

சிலருக்கு இளம் வயதிலேயே அல்லது பள்ளி மாணவ மாணவிகளுக்குக் கூட நரைமுடி இருப்பதைக் கண்டிருப்பீர்கள். இது அவர்களின் பரம்பரையில் இருக்கக்கூடிய மரபணுவின் தன்மையாகும். மரபணு மற்றும் பரம்பரை ரீதியாக இளம் வயதில் முடி நரைக்கத் தொடங்கினால், அதற்குத் தீர்வு கிடையாது.

மெலனின் உற்பத்தி குறைபாடு

மெலனின் என்பது நம்முடைய ஒரு பிக்மென்ட் ஆகும். இது முடிக்கு நிறம் அளிக்கும் இரண்டு கூறுகளை கொண்டது. இரண்டும் சேர்ந்து தான் முடிக்கு இயற்கையான நிறத்தை அளிக்கிறது. உங்களுக்கு வயதாகும் போது அல்லது வாழ்க்கை முறை காரணங்களால் மெலனின் உற்பத்தி குறையத் துவங்குகிறது. இதனால் முடி அதனுடைய இயற்கையான நிறத்தை இழந்து வெள்ளை நிறத்தில் மாறுகிறது. சரியாகத் தூங்காமல் இருந்தாலும் மெலனின் குறைபாடு ஏற்படும்.

                                           

மன அழுத்தம்

சமீபத்தில் மன அழுத்தம் இல்லாதவர்களே கிடையாது என்று கூறும் அளவிற்கு மன அழுத்தம் அனைவரையும் பாதித்துள்ளது. மன அழுத்தம் உங்கள் உடலுக்குள் மட்டுமல்லாமல் உங்கள் தோற்றத்திலும் ஏகப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பது மட்டுமல்லாமல் நீங்கள் எப்படி காட்சியளிக்கிறீர்கள் என்பதிலும் மன அழுத்தம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பெரும்பாலானவர்களுக்கு நரை முடி இளம் வயதிலேயே தோன்றுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று மன அழுத்தம்.

வைட்டமின் பி12 ஊட்டச்சத்து குறைபாடு

வைட்டமின் பி12 உடலில் சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி செய்யும் முக்கிய வைட்டமின் ஆகும். வைட்டமின் குறைபாடு இருந்தால் தலைமுடிக்கு, வேர்களுக்கு ரத்தம் சரியாக பாயாமல் இருந்தாலும், முடி நரைக்கத் தொடங்கும்.

முடி நரைக்கத் துவங்கும் பொழுது ஆரம்ப காலத்திலேயே அதற்கு பரமாரிப்பை மேற்கொண்டால், முடி கருமையாகத் தொடங்கும். இயற்கையான பொருட்களை வைத்து வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான கூந்தல் பராமரிப்பு குறிப்புக்கள் இங்கே.

                                                 

கருவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் கருவேப்பிலையை சேர்த்து தினமும் முடியில் தலையில் தடவி வரலாம். தேங்காய் எண்ணெய் முடிக்கு ஊட்டமளிக்கும், கருவேப்பிலை கூந்தலின் நிறத்தை கருமையாக மாற்ற உதவும்.

மருதாணி மற்றும் முட்டை

மருதாணி அழகுக்காக மட்டுமல்லாமல் ஆரோக்கியத்துக்காகவும் பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு இயற்கையான பொருள் ஆகும். பல ஆண்டுகளாக இயற்கையான ஹேர் கலரிங்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மருதாணி நரைமுடிக்கு தீர்வாக அமைவதோடு மட்டுமல்லாமல் கூந்தலையும் ஆரோக்கியமாக்கும். மருதாணியோடு முட்டையை சேர்த்து தடவும் போது உங்கள் கூந்தல் அதிக வலுப்பெறும்.

 

வெங்காயம் மற்றும் எலுமிச்சை சாறு

நரைமுடிக்கு மிகச்சிறந்த தீர்வாக வெங்காயம் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. ஆனால், கூந்தல் ஆரோக்கியம் மற்றும் நரைமுடிக்கு சமீபத்தில் தான் வெங்காயம் பயன்படுத்துவது பிரபலமாகி வருகிறது. வெங்காயத்தில் இருக்கும் நுண்-ஊட்டச்சத்துகள் முடிக்கு ஊட்டம் அளிப்பதோடு மட்டுமல்லாமல் நரை முடியை கருமையாக்கவும் உதவுகிறது.

Related Post