பிறந்த குழந்தைக்கு தாய்பால்தான் சிறந்த உணவு. ஆறு மாதம் வரை தாய்பால்தான் தர வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். வேலைக்கு செல்லும் இளம் தாய்மார்கள் அதிகம் சந்திக்கும் பிரச்சினை மார்பில் பால் கட்டிக்கொள்வதுதான். மார்பகத்தில் தாய்ப்பால் கட்டிக்கொள்வது இயல்பான விஷயம்தான். நம்முடைய வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அதற்கான தீர்வினை எளிதாக கூறுவார்கள். தாய்பால் கொடுக்கும் போது இரண்டு மார்பகங்களிலும் மாற்றி மாற்றி பால் கொடுக்க வேண்டும். ஒரு பக்கம் மட்டும் தாய்ப்பால் கொடுத்தால் மற்றொரு பக்க மார்பகத்தில் பால் கட்டிக் கொண்டு வலி ஏற்படும். மார்பகத்தில் பால் கட்டி இருந்தாலும் லேசாக வீங்கி இருந்தாலும், அதை மசாஜ் செய்வதன் மூலமும் சரி செய்யலாம்.
பால் கட்டிக்கொண்டு கனமான மார்பகத்தை மென்மையாக அழுத்தி, கட்டிய பாலை வெளியேற்றி விட வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்னும் பின்னும் உங்கள் கைகளால் மார்பகங்களை மசாஜ் செய்யுங்கள். பால் கட்டாமல் இருக்க படுக்கும் போது, ஒரு பக்கமாக படுக்கவும். ஒரு பக்கமாக படுத்து உறங்கினால் எளிதில் பால் கட்டிக்கொள்ளாது.
ஒரு சிலருக்கு தாய் பால் சுரப்பு அதிகமாக இருக்கும். குழந்தையோ சிறிதளவுதான் பால் குடிக்கும். இதனாலும் பால் கட்டிக்கொள்ளும். எனவே மல்லிகைப்பூ சிறந்த நிவாரணி. மார்பகத்தில் எங்கு தாய்ப்பால் கட்டி இருக்கிறதோ அங்கு மல்லிகைப்பூக்களை வைத்து கட்டலாம். அதன் மூலம் தாய்ப்பால் கட்டி இருப்பது சரியாகும். இதை அடிக்கடி செய்யக்கூடாது அப்படி செய்தால் தாய்ப்பால் சுரப்பு குறைந்துவிடும். பெரிய முட்டைக்கோஸ் இலைகளை எடுத்து 2 நிமிடம் சுடுநீரில் போட்டு, அது சூடு ஆறிய பின் அதனை மார்பில் கட்டி வைக்க தாய்பால் கட்டுவது நிற்கும். உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். ஜில்லான அந்த கிழங்கை எடுத்து தாய்ப்பால் கட்டி இருக்கும் இடத்தில் மசாஜ் செய்யலாம்.
அவலை சூடான தண்ணீரில் ஊற வைத்து அரைத்து மார்பகத்தில் பற்று போல போட்டாலும் தாய்ப்பால் கட்டி கொள்வது சரியாகும். துவரம்பருப்பை சிறிதளவு மஞ்சள் சேர்த்து ஊறவைத்து அதை நன்றாக கெட்டியாக அரைத்து மார்பகங்களில் பற்று போடலாம். சூடான தண்ணீரில் டர்க்கி டவலை நனைத்து, பிழியவும். இளஞ்சூடாக மார்பகங்களில் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். ஐஸ் கட்டியை எடுத்து மார்பகத்தில் மிதமாகத் தேய்த்து ஒத்தடம் கொடுத்தால் தாய்ப்பால் கட்டி இருப்பது சரியாகும்.
மார்பகங்களில் எந்த விதமான கிரீம், மருந்துகள் தடவ கூடாது. குழந்தை பால் குடிக்கும்போது, கெமிக்கல்கள் குழந்தையின் உடலுக்குள் சென்று விடும். பால் கட்டிக்கொண்டிருந்தாலும் அதை நன்றாக பீய்ச்சி வெளியேற்றிய பின்னர்தான் குழந்தைக்கு பால் தர வேண்டும் இல்லாவிட்டால் கெட்டுப்போன பாலை குடித்து வயிற்றுப்போக்கு ஏற்படும். எனவே மேற்கண்ட வீட்டு வைத்திய முறைகளை பயன்படுத்தி மார்பில் தாய்பால் கட்டிக்கொண்டவர்கள் எளிதில் நிவாரணம் பெறலாம்.