இளம் பருவத்தில் குழந்தைகளின் வளர்ச்சி என்பது மிக முக்கியமானது. அது உடல் வளர்ச்சியானாலும் சரி அல்லது உடல் உள்ளுறுப்புகளின் வளர்ச்சி என்றாலும் சரி, இந்தக் காலகட்டம் மிக முக்கியமானதாகும். குழந்தையின் உடல் வளர்ச்சிக்கும், மூளை செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை இளம் பருவத்தில் தவறாமல் கொடுக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளின் கவனித்தல் திறன், ஞாபகத் திறன் மற்றும் கூர்ந்து நோக்கும் திறன் போன்றவற்றை மேம்படுத்துவதற்கு குறிப்பிட்ட சில வகை உணவுகள் தூண்டுதலாக அமையும்.
குழந்தைகளின் மூளையின் துரிதமான வளர்ச்சி என்பது முதல் சில ஆண்டுகளிலேயே நடைபெறும் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது, குழந்தைக்கு 2 வயது ஆகும்போதே 80 சதவீத வளர்ச்சியை எட்டிவிடுமாம். இதைத்தொடர்ந்து பெரியவர்களாக மாறும் சமயத்திலும் தொடர்ந்து மூளை வளர்ச்சி நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.
குழந்தைகளின் தனித்திறமைகளை கட்டமைக்கும் பகுதியான prefrontal cortex என்னும் பகுதியானது பருவ வயதில் வளர்ச்சி அடையத் தொடங்குகிறது. திட்டமிடுதல், ஞாபகத் திறன், முடிவெடுக்கும் திறன் மற்றும் இதர முக்கியமான செயல்பாடுகளை இந்தப் பகுதிதான் செயல்படுத்துகிறது. ஆகவே, குழந்தைகளின் மூளை செயல்பாடு மேம்படும் வகையிலான உணவுகளை தவறாமல் கொடுத்து வர வேண்டும்.
மூளையின் நலன் காக்க வேண்டும் என்றதுமே நம் வீட்டில் பாட்டி சொல்கின்ற வைத்தியத்தின்படி வெண்டக்காய் எடுத்துக் கொள்வதும், வல்லாரை கீரையை துவையல் செய்து சாப்பிடுவதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயங்கள் தான். இது தவிர முக்கியமான உணவுகள் என்னென்ன என்று இப்போது பார்க்கலாம்.