வெள்ளாட்டுப்பாலில் நிறைய சத்துகள் உள்ளன. இயற்கையாகவே வெள்ளாட்டுப்பாலில் ‘ஆன்டி ஆக்ஸிடன்ட்’ இருக்கிறது. ஆஸ்துமா, இருமல், காசநோய் பிரச்னைகளுக்கு வெள்ளாட்டுப்பால் மிகவும் ஏற்றது.
``ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் அவதிப்படும் அனைவரும் வெள்ளாட்டுப்பாலை உணவாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்” என்று கூறிய மகாத்மா காந்தி தன் வாழ்நாளில் அதைக் கடைப்பிடித்தும் வந்தார். தாய்ப்பால் கிடைக்கப்பெறாத குழந்தைகளுக்கு வெள்ளாட்டுப்பால் முதன்மையாக பரிந்துரைக்கப்படுகிறது.
உலக அளவில் மொத்த பால் உற்பத்தியில் வெள்ளாட்டுப்பால் 2 சதவிகிதம்தான். ஆனால் அதற்கான தேவைகள் அதிகம் உள்ளது. எனவே வெள்ளாட்டுப்பால் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று ஆயுர்வேத மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.
ஒரே நேரத்தில் விவசாயமும் மின்சாரமும்... விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் அக்ரிவோல்டாயிக்ஸ்!
இறைச்சிக்காகவும் இனபெருக்கத்துக்காகவும் மட்டுமே வெள்ளாடு வளர்க்கப்பட்டு வந்த நிலையில், வெள்ளாடு தரும் பாலில் இருந்து அதிக லாபம் பெற முடியும் என்பதை சாதித்துக் காட்டியுள்ளார் கர்நாடக மாநிலம், மைசூரைச் சேர்ந்த ஶ்ரீனிவாஸாச்சார்யா என்ற விவசாயி. இவர் தென்னிந்திய அளவில் வெள்ளாட்டுப்பால் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னோடியாக இருந்து வருகிறார்.
30 ஆடுகள் இருந்தாலே போதும், வருமானம் பார்க்க ஆரம்பிக்கலாம் என்கிறார் ஶ்ரீனிவாஸாச்சார்யா. வெள்ளாடு வளர்ப்பு, பராமரிப்பு, பால் உற்பத்தி, விற்பனை, வருமானம் குறித்து ஆலோசனையும், பயிற்சியும் கொடுக்க உள்ளார்.
எங்கே? எப்பொழுது...
விகடன் குழுமம் நடத்தும் `பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - 2023’ எனும் பிரமாண்ட வேளாண் கண்காட்சி ஏப்ரல் 28-ம் முதல் 30-ம் தேதி வரை திருச்சியில் நடைபெற உள்ளது. 3 நாள்களும் வெவ்வேறு தலைப்புகளில் வேளாண் வல்லுநர்கள், நிபுணர்கள், விவசாயிகள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் உரையாற்றும் கருத்தரங்கு அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளன. செவிக்கும் கண்களுக்கும் விருந்தளிக்கும் வண்ணம் கண்காட்சி நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதில் முதல்நாள் நிகழ்ச்சியான ஏப்ரல் 28 அன்று, சிறப்பு அழைப்பாளராக வெள்ளாட்டுப்பால் விற்பனையில் மாதம் ரூ.4 லட்சம் லாபம் ஈட்டும் விவசாயி ஸ்ரீனிவாஸாச்சார்யா கலந்து கொண்டு வழிகாட்டுகிறார்.
வெள்ளாட்டுப்பால் உற்பத்திக்கு ஏற்ற ஆட்டினங்கள், வெளியிலிருந்து தீவனம் வாங்காமல் ஆடு வளர்க்கும் முறைகள், நோய் மேலாண்மை, வெள்ளாட்டுப்பாலை பதப்படுத்தி நீண்ட நாட்களுக்கு வைத்து விற்பனை செய்தல், நெய், சோப், கிரீம் உள்ளிட்ட பொருட்களாக மதிப்புக்கூட்டுதல், நவீன பேக்கிங் முறைகள் உள்ளிட்ட ஃபார்முலாவை விளக்குகிறார். இந்த வாய்ப்பை விவசாயிகள் மற்றும் ஆர்வமுள்ள மக்கள் அனைவரும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மாறிவரும் காலசூழலில் சந்தைக்கு என்ன தேவை, எப்படி உற்பத்தியில் லாபம் பார்க்கலாம் என்பதை விவசாயிகள் அறிந்து தங்கள் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு வல்லுநர்களின் வழிகாட்டுதல்கள் இந்த கண்காட்சியில் இருக்கும்.
முதல் நாளான அன்று சிறப்பு அழைப்பாளராக விவசாயி மற்றும் திரைக்கலைஞர் கருணாஸ், வேளாண் ஏற்றுமதிக்கு உதவும் அபிடாவின் கூடுதல் பொது மேலாளர் & மண்டல இயக்குனர் ஷோபனா குமார் ஆகியோர் பங்கேற்கின்றனர். மேலும் விவசாயி, ஏற்றுமதியாளர், வழிகாட்டியாக விளங்கும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் எம்.நாச்சிமுத்து `உலகம் போற்றும் முருங்கை' என்ற தலைப்பில் முருங்கை விதை முதல் விற்பனை வரை விளக்கி பேச இருக்கிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி செம்மர விவசாயி, செம்மரச் செம்மல் ஆர்.பி.கணேசன், `செம்மர வளர்ப்பில் கோடிகளில் லாபம்’ குறித்து பேசுகிறார்.
கோடைக்காலம்... மாடித்தோட்டம் வாடி, வதங்கமால் இருக்க செய்ய வேண்டிய பராமரிப்பு முறைகள்..!
இரண்டாம் நாள் நிகழ்ச்சியான ஏப்ரல் 29 அன்று, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பதிவாளர், முனைவர் பா.டென்சிங் ஞானராஜ். `லாபகரமான கால்நடை பண்ணைக்கு வழிகாட்டும் பல்கலைக்கழகம்!’ என்ற தலைப்பில் பேசுகிறார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ப.வெங்கடாசலம், விவசாயம் நேற்று, இன்று, நாளை என மாறிவரும் தொழில் நுட்பங்கள் குறித்தும், அதைப் பயன்படுத்திக்கொள்ளும் நுட்பங்கள் குறித்தும் பேசுகிறார்.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு, நலம் தரும் நல்மருந்துகளும் நல்வாழ்வியலுக்கான வழிமுறைகளும் குறித்துப் பேசுகிறார்.
`கடனில் மூழ்கிய ரசாயன விவசாயி, இயற்கை வேளாண்மையில் வெற்றி பெற்ற பாடம்’ என்ற தலைப்பில் தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி புளியங்குடி அந்தோணிசாமி தன்னுடைய வெற்றி அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.
தஞ்சாவூர், பொன்னையா ராமஜெயம் வேளாண் கல்லூரி முதல்வர் முனைவர் அ.உதயகுமார், லாபத்தை அள்ளித் தரும் அசத்தலான வெளிநாட்டுத் தொழில்நுட்பங்கள் குறித்து பேசுகிறார்.
மூன்றாம் நாள் நிகழ்ச்சியான ஏப்ரல் 29 அன்று, திருச்சி பாசன மேலாண்மை பயிற்சி நிலையம் உதவிப் பேராசிரியர் பூச்சியியல் நிபுணர் நீ.செல்வம் `பூச்சிகளும் நண்பர்களே!” என்ற தலைப்பில் பேசுகிறார்.
தஞ்சாவூர் மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் துணைத் தலைவர் முனைவர் புண்ணியமூர்த்தி கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம் குறித்து பேசுகிறார்.
வீட்டுத்தோட்டம் போடலாம் வாங்க! என்ற தலைப்பில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீட்டுத்தோட்ட ஆலோசகர், பிரியா ராஜ்நாராயணன் பேசுகிறார்.
மேலும், விவசாயத்தில் ட்ரோன் பயன்பாடு குறித்து நேரடி செயல்விளக்கம் நடைபெறும்.
இந்தக் கண்காட்சிக்குத் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், இந்திய பயிர் பதன தொழில்நுட்ப மையம், தேசிய விதைக் கழகம், தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம் ஆகியவை தங்களது ஆதரவை வழங்கியுள்ளன. ஆனந்தா விவசாய தீர்வகம் நிறுவனமும் தனது ஆதரவை வழங்கியுள்ளது. எப்போதும் பசுமை விகடன் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு மாபெரும் வரவேற்பு அளித்து வரும் விவசாயிகளுக்கு இந்நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள...
திருச்சி, மத்திய பேருந்து நிலையம் அருகே நடந்து செல்லும் தொலைவில் உள்ளது கலையரங்கம். காலை 10 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வுக்கு நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.30 மாணவர்களுக்கு ரூ.15 ஆகும். விவசாய பெருமக்கள், பொதுமக்கள் அனைவரையும் கண்காட்சிக்கு அன்புடன் அழைக்கிறோம்.