காலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவுடன் காபி, டீ என ஏதாவது குடித்தால்தான் நிறைவாக உணர முடிகிறது. ஆனால் இப்படி காபி, டீ குடிப்பது தவறு என்றும் அதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள்... அதற்கு பதில் ஜூஸ், மில்க் ஷேக், மசாலா பால் போன்றவற்றைக் குடிப்பது ஆரோக்கியமானதா?
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்
ஒவ்வொரு வேளை உணவையும் பார்த்துப் பார்த்துச் சமைக்கிறீர்கள். சத்துகள் குறையாமலிருக்கும்படி கவனமாகச் செய்கிறீர்கள் அல்லது பணம் செலவழித்து வெளியில் வாங்கிச் சாப்பிடுகிறீர்கள். அவ்வளவு மெனக்கெடும்போது, அதன் பலனை நீங்கள் தக்கவைத்துக்கொள்ள வேண்டியது அவசியமில்லையா... காலை, மதியம், இரவு என எந்த வேளை உணவுடனும் நீங்கள் எடுத்துக்கொள்ளும் காபி அல்லது டீயில் உள்ள ஃபைட்டேட் (Phytate), உங்கள் உணவின் மூலம் கிடைக்கக்கூடிய வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகளை உடலில் சேரவிடாமல் செய்துவிடும். அதனால்தான் உணவுடன் காபி, டீ குடிக்க வேண்டாம் என அறிவுறுத்துகிறோம்.
நீங்கள் கேட்டதுபோல காபி, டீதானே ஆரோக்கியமற்றவை... ஜூஸ் ஆரோக்கியமானதுதானே என்ற எண்ணத்தில் பலரும் உணவுடன் தினமும் ஏதோ ஒரு ஜூஸ் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். உணவுக்குப் பிறகு ஜூஸ் குடிப்பது என்பது கூடுதல் கலோரிகளைச் சேர்க்கவே காரணமாகும். அதிலும் பெரும்பான்மையானோர், பழங்களை அரைத்து, வடிகட்டி, சதைப்பகுதியைத் தூக்கிப்போட்டுவிட்டு, வெறும் சாற்றை மட்டும் குடிக்கிறார்கள். பழத்தின் நார்ச்சத்து மொத்தமும் குப்பைக்குப் போகிறது. உண்மையில் நார்ச்சத்துதான் உடலுக்கு ஆரோக்கியமானது, அவசியமானது. ஆனால் நாம் அதற்கு பதிலாக வெறும் சாற்றில் சர்க்கரையைச் சேர்த்து இன்னும் கலோரிகளை ஏற்றிக் குடிக்கிறோம்.
எப்போதுமே ஜூஸாக குடிப்பதைவிட பழங்களாகச் சாப்பிடுவதுதான் சிறந்தது. பழங்களை அரைத்து வடிகட்டாமல் ஸ்மூத்தியாகவும் குடிக்கலாம். இதையும் உணவு இடைவேளைகளில் தான் சாப்பிட வேண்டுமே தவிர, உணவுடன் சேர்த்துக் குடிக்கக்கூடாது. பழங்களையும் உணவு இடைவேளைகளில் எடுத்துக்கொள்வதுதான் சிறந்தது.
உணவு உண்ட பிறகு காபி, டீ, ஜூஸ், மசாலா பால் என எதையுமே குடிக்கக்கூடாது. வெந்நீர் அல்லது சாதாரண தண்ணீர் குடிக்கலாம். அது மட்டுமே போதுமானது.