நமது உடல் ஆரோக்கியத்திற்கு இரும்பு சத்து மிகவும் அவசியமான ஒரு தாதுவாகும். ஏனெனில் இது ரத்த சிவப்பு அணுக்களுக்கு உடல் முழுவதும் ஆக்சிஜனை சுமந்து செல்ல உதவி புரிகிறது. இரும்புச்சத்து நமது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், ஆரோக்கியமான சருமம், தலைமுடி மற்றும் நகங்களுக்கும் பங்களிக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஒரு நபரின் கற்கும் திறனுக்கும் இரும்புச்சத்து பொறுப்பேற்கிறது.
இரும்பு சத்து குறைபாடு ஒரு பொதுவான பிரச்சனையாகவே இருந்து வருகிறது. குறிப்பாக இது சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை பாதிக்கிறது. சமீபத்தில் 12 வயது முதல் 21 வயதிலான பெண்களுக்கு இரும்பு சத்து குறித்த ஒரு ஆய்வு அமெரிக்காவில் நடத்தப்பட்டது. இதில் 3500 பெண்கள் பங்கு கொண்டனர். இவர்களில் 40 சதவீதம் பெண்களுக்கு இரும்பு சத்து குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது.
இரும்பு சத்து குறைபாட்டின் அறிகுறிகள்:
கிறுகிறுப்பு, சோர்வு, மயக்கம் மற்றும் மூச்சு திணறல் இருப்பது இரும்பு சத்து குறைபாட்டின் சில அறிகுறிகள். அதுமட்டுமல்லாமல் வெளிர்ந்த சருமமும் இரும்பு சத்து குறைபாட்டிற்கான ஒரு அறிகுறி ஆகும். இரும்புச்சத்து குறைபாட்டிற்கான அறிகுறிகள் பற்றி தெளிவாக புரிந்து கொள்ள ஒரு மருத்துவரை அணுகுவது அவசியம். ரத்த பரிசோதனை செய்வது இரும்பு சத்து குறைபாட்டை கண்டறிவதற்கான ஒரு எளிய வழி.
இரும்பு சத்து நிறைந்த உணவுகள்:
இரும்பு சத்து குறைபாடு அல்லது ரத்த சோகை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நமது உணவு தான். நாம் உண்ணும் உணவில் போதுமான அளவு இரும்புச்சத்து கிடைக்கிறதா என்பதை உறுதி செய்வது ரத்த சோகையிலிருந்து விடுபட உதவும். அந்த வகையில் அடர்ந்த பச்சை இலை காய்கறிகள், தானியங்கள், பிரட், இறைச்சி மற்றும் ஆப்பிரிக்காட், ப்ரூன், உலர்ந்த திராட்சை போன்ற உலர்ந்த பழங்கள் மற்றும் பீன்ஸ், பச்சை பட்டாணி மற்றும் பயிர் வகைகள் போன்ற இரும்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.
ரத்த சோகை உள்ளவர்கள் என்னென்ன சாப்பிட வேண்டும் என்று அடிக்கடி சொல்லப்பட்டாலும் அவர்கள் தவிர்க்க வேண்டிய ஒரு சில உணவுகளும் உள்ளன. டீ, காபி, பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் போன்றவை சாப்பிடுவதை குறைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் இது போன்ற பானங்களை பருகுவது நமது உடலுக்கு இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு தடையாக செயல்படுகிறது.
இரும்புச்சத்து குறைபாடு என்னென்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்?
இரும்பு சத்து நிறைந்த உணவுகள் அல்லது சப்ளிமெண்ட்கள் மூலமாக இரும்புச்சத்து பெறாத குழந்தைகளுக்கு ரத்த சோகை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ரத்த சோகை வந்துவிட்டால் நமக்கு உடல் நலக்குறைவு மற்றும் தொற்று எளிதாக ஏற்படக்கூடும். அது மட்டுமல்லாமல் தீவிரமான நிலைகளில், இது இதயம் அல்லது நுரையீரல்களை கூட பாதிக்கலாம். கர்ப்ப காலத்தில் இரும்புசத்து குறைபாடு ஏற்படுவது தாய்க்கும் சேய்க்கும் பல பிரச்சனைகளை உண்டாக்கலாம்.