தூசி அல்லது நெடியின் காரணமாக யாருக்கும் தும்மல் வரலாம். அப்படி வருவது ஒன்றிரண்டு தும்மலுடன் நின்றுவிடும். ஆனால் அதுவே 50, 60 என அடுக்கடுக்காக தும்மல் போட்டால், அது அலர்ஜியின் காரணமாக வந்ததாக இருக்கலாம்.
தொடர் தும்மலுக்கு 'அலர்ஜிக் ரைனிட்டிஸ்' (Allergic rhinitis) எனப்படும் பிரச்னையே காரணம். அதாவது ஒவ்வாமையின் விளைவால் மூக்கின் உள்ளே உள்ள சவ்வில் ஏற்படும் அழற்சி அல்லது வீக்கத்தைக் குறிக்கும் பிரச்னை இது. பலருக்கும் இந்த ஒவ்வாமையானது மூக்கின் உள்சவ்வு அழற்சியோடு மட்டும் நிற்காமல், சைனஸ் என்கிற பாதிப்பையும் ஏற்படுத்தும். மூக்கைச் சுற்றியுள்ள காற்றறைகளில் ஏற்படும் ஒவ்வாமையாலும் தும்மல் வரலாம்.
மூக்கைப் பரிசோதனை செய்யும்போது உள்ளே சவ்வு வீங்கியிருப்பது தெரியும். மூக்கின் உள்ளே உள்ள குறுத்தெலும்புகள் (Turbinates) வீங்கியிருக்கும். இது அலர்ஜி இருப்பதற்கான அறிகுறி.
இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட, மூக்கின் உள்ளே பயன்படுத்தும் நேசல் ஸ்பிரே எடுக்கலாம். மூக்கின் உள்ளே செலுத்தப்படும் ஸ்டீராய்டு மருந்துகள, அலர்ஜிக்கான மருந்துகள் அல்லது இரண்டும் கலந்த கலவை மருந்துகள் உதவியாக இருக்கும். நாள்பட்ட அலர்ஜிக்கான மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளலாம்.