இந்த வெந்தயத்தை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து, உடல் குளிர்ச்சியாக இருக்கும். ஆனால் இந்த வெந்தயத்தை ஊற வைத்து, அதை முளைக்கட்ட வைத்து உட்கொண்டால், இருமடங்கு நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்பது தெரியுமா?
மெத்தி என்று அழைக்கப்படும் வெந்தய விதைகளில் அற்புதமான மருத்துவ பண்புகள் நிறைந்துள்ளன. இந்த அற்புத விதைகளை பச்சை பயறை முளைக்கட்ட வைத்து எப்படி சாப்பிடுவோமோ, அப்படி முளைகட்ட வைத்து சாப்பிட்டால், உடலில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயத்தைத் தடுக்கலாம்.
அதுவும் தினமும் ஒரு கையளவு முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிட்டால் வாழ்நாளை நீட்டிக்கலாம். இப்போது முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
சர்க்கரை நோய் கட்டுப்படும் முளைக்கட்டிய வெந்தயம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இது இரத்தத்தில் க்ளுக்கோஸை மெதுவாக வெளியிடச் செய்யும். இதன் விளைவாக இரத்த சர்க்கரை சட்டென அதிகரிப்பது தடுக்கப்படும். அதுவும் சர்க்கரை நோயாளிகள் பின்வருமாறு சாப்பிடுவது நல்லது.அதற்கு வெந்தயத்தை நீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து, பின் அதை ஒரு ஈரத்துணியில் போட்டு கட்டி ஒரு நாள் முழுவதும் வைக்க வேண்டும். அவ்வப்போது அதில் நீரைத் தெளிக்க வேண்டும். இப்படி செய்தால், வெந்தயம் முளைக்கட்டிவிடும். அதன் பின் அந்த முளைக்கட்டிய வெந்தயத்தை ஒரு கையளவு எடுத்து, அதில் சிறிது மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து உட்கொள்ள வேண்டும்.
எடை இழப்புக்கு உதவி புரியும் வெந்தயத்தை முளைக்கட்ட வைக்கும் போது, அந்த விதைகளில் உள்ள சத்துக்களின் மதிப்பு அதிகரிக்கும். அதுவும் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள், முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் ஒரு கையளவு உட்கொண்டு வந்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும். மேலும் இதில் கேலக்டோமன்னன் நிரம்பியிருப்பதால், இது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். இதன் மூலம் உடல் எடை இழப்புக்கு உதவி புரிகிறது.
நோயெதிர்ப்பு சக்தி வலுபெறும் முளைக்கட்டிய வெந்தயத்தில் பீனால்கள், ப்ளேவோனாய்டுகள், அல்கலாய்டுகள் மற்றும் டானின்கள் போன்ற பைட்டோகெமிக்கல்கள் அதிகமாக உள்ளன. இவை அனைத்தும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகின்றன. ஆகவே முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிடும் போது உடலில் ஆன்டி-பாக்டீரியல், அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை சிறப்பான அளவில் இருக்கும். இதன் விளைவாக உடலில் சிறு கிருமிகள் நுழைந்தாலும், அது திறம்பட அழிக்கப்பட்டு, ஒட்டுமொத்த ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இதய ஆரோக்கியம் மேம்படும் முளைக்கட்டிய வெந்தயத்தை பொட்டாசியம் அதிகளவில் உள்ளன. இந்த பொட்டாசியம் உடலில் சோடியத்தை கட்டுப்படுத்தி, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றை குறைப்பதோடு, இரத்தத்தில் கொலஸ்ட்ரால் தேங்குவதை திறம்பட கட்டுப்படுத்துகிறது. இதன் விளைவாக மாரடைப்பு போன்ற இதய நோய்களின் அபாயம் குறைந்து, இதய ஆரோக்கியம் மேம்படும்.
செரிமானம் மேம்படும் வெந்தயத்தை நீரில் ஊற வைக்கும் போது, அது மென்மையாகவும் மிருதுவாகவும் ஆகிறது. இதனால் இதை உட்கொள்ளும் போது, அது எளிதாகவும், வேகமாகவும் ஜீரணமாகிறது. மேலும் முளைக்கட்டிய வெந்தயத்தை உட்கொள்ளும் போது, அது கணையத்தில் பீட்டா செல்களின் உற்பத்தியை மேம்படுத்துகிறது. அதோடு அசிடிட்டி, வாய்வுத் தொல்லை, வயிற்றுப்போக்கு, அஜீரண கோளாறு போன்றவற்றைத் தடுத்து, செரிமான செயல்முறையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
பாலியல் ஆரோக்கியம் மேம்படும் பண்டைய பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில், வெந்தயமானது பாலுணர்ச்சி மற்றும் பாலியல் செயல்திறனை மேம்படுத்த பயன்படுத்தப்பட்டு வந்தது. மேலும் இதை ஆய்வுகளும் உறுதிப்படுத்தியுள்ளன. ஆகவே பாலியல் பிரச்சனைகளை சந்திப்பவர்கள், முளைக்கட்டிய வெந்தயத்தை உட்கொண்டு வந்தால், பாலியல் ஆரோக்கியம் மேம்பட்டு, பாலியல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.