பாபா வங்கா, நாஸ்ட்ராடாமஸ் கணிப்புகள்.. உருட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா?

post-img
நியூயார்க்: பிரபல தீர்க்கதரிசிகளாக அறியப்படும் பாபா வங்கா மற்றும் நாஸ்டர்டாமஸ், எதிர்காலம் குறித்து துல்லியமாக கணித்திருப்பதாக பல்வேறு செய்தி ஊடகங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் இதில் பெரும்பான்மையாக பொய்யான தகவல்கள்தான் இருப்பதாக அறிவியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். யார் இந்த பாபா வங்கா?: பல்கேரியாவை சேர்ந்த இவர், தனது 12 வயதில் ஒரு புயலில் கண்பார்வையை இழந்திருக்கிறார். ஆனால் எதிர்காலத்தில் நடப்பவை அனைத்தும் தனக்கு தெரிவதாக கூறி வந்த இவர், சில விஷயங்களை குறிப்பிட்டு எதிர்க்காலத்தில் இதெல்லாம் நிச்சயம் நடக்கும் என்று கணித்திருக்கிறார். அவரது கணிப்புகள் பல தற்போது பலித்து வருவதாக ஊடகங்கள் கூறி வருகின்றன. குறிப்பாக புத்தாண்டுக்கு முந்தைய தினமான டிச.31ம் தேதியன்று பல ஊடகங்களில், பாபா வங்கா கணித்ததில் எவையெல்லாம் நடந்தது? என்று குறிப்பிட்டு செய்திகள் வெளியாகியிருந்தன. பாபா வங்கா பெயரில் உருட்டுகள்: இவருடைய கணிப்புகளில் அடிக்கடி சொல்லப்படுவது போர்கள்தான். 2024ம் ஆண்டும் உக்ரைன் போர் உச்சத்தை எட்டும் என்று இவர் கணித்திருந்ததாகவும், அதேபோல போர் தீவிரமடைந்திருந்தது என்றும் பலரும் எழுதியிருந்தார்கள். ஆனால் உண்மையில் அவர் உக்ரைன் போரை பற்றி கூறியிருக்க வாய்ப்பே இல்லை. அதாவது 1911ம் ஆண்டு பிறந்த பாபா வங்கா, 1996ல் உயிரிழந்திருக்கிறார். இந்த காலத்தில் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் எந்த முட்டல் மோதல்களும் நடந்தது கிடையாது. 1990ல் சோவியத் ரஷ்யா உடைகிறது.. அதனை தொடர்ந்து 1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி உக்ரைன் தன்னை தனி நாடாக அறிவிக்கிறது. இப்படி நடந்து 5 ஆண்டுகளில் பாபா வங்கா இறந்துவிட்டார். இந்த 5 ஆண்டுகளில் ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே எந்த சண்டையும் நடக்கவில்லை. அப்புறம் எப்படிங்க அவர் உக்ரைன் போர் குறித்து கணித்திருப்பார்? உருட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? இப்படி பல விஷயங்களில் பாபா வங்கா கணித்திருப்பதாக கூறி பரபரப்பை கிளப்புவதே ஒரு பெரிய வேலையாக வைத்திருக்கிறார்கள் சிலர். நாஸ்டர்டாமஸ் பெயரில் கற்பனைகள்: பாபா வங்கா கூட பரவால்லைங்க.. 1996ல்தான் அவர் செத்துப்போனார். எனவே உலக நடப்புகள் குறித்து ஓரளவுக்கு தெரிந்திருக்கும். ஆனால் நாஸ்டர்டாமஸ் காலம் சென்ற மனுஷன். 1503ல் பிறந்து 1566ல் அவர் இறந்துவிட்டார். அவர் வாழ்ந்த காலத்தில் உலகம் முழுவதும் மொத்தம் 50-100 நாடுகள்தான் இருந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஐரோப்பா எனும் கண்டமே வரையறுக்கப்படவில்லை. ஆனால் அவர் ஐரோப்பா பற்றியும், புதின் பற்றியும், டிரம்ப் பற்றியும் கூட கணித்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. பொய் என்பதற்கான ஆதாரங்கள்: மேலே சொன்னதை போல நாஸ்டர்டாமஸ் 1566ல் உயிரிழந்துவிட்டார். அப்போது உக்ரைன் கிடையாது, டிரம்ப் என்பவரின் சந்ததியே பிறந்திருக்காது, புதின் என்ற பெயர் புழக்கத்தில் கூட இருந்திருக்காது. ஆனால் 2025ல் இவர்களுக்கு ஆபத்து இருக்கிறது என்றும், உக்ரைன் போர் உச்சத்தை தொடும் என்றும், ஐரோப்பிய நாடுகள் தீவிரவாத தாக்குதலை எதிர்க்கொள்ளும் என்றும் அவர் கணித்திருப்பதாக உருட்டுக்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. சமீபத்தில் கூட MR.GK எனும் யூடியூபர், பாபா வங்கா, நாஸ்டர்டாமஸ் உருட்டுகள் என்று ஆதாரத்துடன் வீடீயோவை பகிர்ந்திருந்தார். ஆங்கில யூடியூப்களில் இந்த உருட்டுகள் குறித்து மேலும் அதிகமான தகவல்கள் ஆதாரத்துடன் கிடைக்கப்பெறுகிறது. எனவே இனி வரும் நாட்களிலாவது உருட்டு எது உண்மை எது என்று ஊடகங்கள் பிரித்து பார்த்து செய்தியை பகிரும் என்று எதிர்பார்க்கலாம். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post