நடிகர் போஸ் வெங்கட்டின் சகோதரியும், சகோதரரும் ஒரே நாளில் அடுத்தடுத்து மரணம் அடைந்த நிலையில் அவர்களது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டிஒலி சீரியல் மூலம் நடித்து பிரபலமானவர் நடிகர் போஸ் வெங்கட். அதனைத் தொடர்ந்து தனது யதார்த்த நடிப்பால் சினிமாவிலும் கால்தடம் பதித்து தனக்கென தனியிடத்தை பிடித்தார்.
அதன்படி, குணசித்திர நடிகர் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இவர் நடிகராக மட்டுமில்லாமல் கடந்த 2020ம் ஆண்டு வெளியான கன்னிமாடம் என்ற திரைப்படத்தையும் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் போஸ் வெங்கட் குடும்பத்தில் நேற்று ஒரே நாளில் 2 உயிரிழப்புகள் ஏற்பட்டு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
போஸ் வெங்கட்டின் சகோதரி வளர்மதி நேற்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். தகவல் அறிந்து, அவரது இறுதி சடங்கிற்கு போஸ் வெங்கட்டின் சகோதரர் ரங்கநாதன் அறந்தாங்கியில் இருந்து விரைந்து வந்து மறைந்த சகோதரியின் உடல்மீது சாய்ந்து கதறி அழுத நிலையில் அவருக்கும் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
போஸ் வெங்கட்டின் மறைந்த சகோதரி யின் உடல் நேற்று சென்னையில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது சகோதரர் மறைந்த ரங்கநாதன் உடல் சொந்த ஊரான அறந்தாங்கிக்கு எடுத்து செல்லப்பட்டு இன்று இறுதி சடங்குகள் நடைபெறுகிறது.
நடிகர் போஸ் வெங்கட்டின் சகோதரி மற்றும் சகோதரர் இருவரின் திடீர் மறைவு செய்தி அறிந்து முதல்வர் ஸ்டாலின் போஸ் வெங்கட் மற்றும் மறைந்த குடும்பதாருக்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.