சென்னை மாநகராட்சி யில், தினம் 52 லட்சம் கிலோ குப்பை சேகரிக்கப்படுகிறது. அதில், 60 சதவீதம் மட்கும், , மட்காத குப்பையாக தரம் பிரித்து பெறப்படுகிறது. வருங்காலத்தில் 100 சதவீத குப்பையையும், தரம் பிரித்து பெறும் நடவடிக்கையில் மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. இதில், 22 லட்சம் கிலோ மட்கும் குப்பையில் இருந்து, உரம் மற்றும் 'பயோ காஸ்' தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த உரம் விவசாய நிலங்களுக்கும் மாநகராட்சி பூங்காக்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
அதேபோல், மட்காத குப்பை தரம் பிரிக்கப்பட்டு, மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, 'பிளாஸ்டிக்' குப்பை, சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு இவை அனுப்பப்படுகின்றன. மேலும், 'பல்ப், பேட்டரி, பெயின்ட், எண்ணெய் கேன்' காலாவதியான மருந்து மாத்திரைகள் ஆகியவை, மணலியில் உள்ள அபாயகரமான எரிவாயு ஆலையில் எரியூட்டப்பட்டு, 'பேவர் பிளாக்' கற்கள் தயாரிக்கப்படுகிறது.
மட்காத குப்பையில், மறுசுழற்சிக்கு பயன்படுத்த முடியாதவை, பெருங்குடி, கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளன.
தற்போது, பெருங்குடி குப்பைக் கிடங்கில் 'பயோமைனிங்' முறையில் அகழ்ந்தெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொடுங்கையூர் குப்பை கிடங்கு பணிகளும் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், சென்னை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் அனைத்து குப்பையையும், ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதற்கு, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, மட்காத குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வல்லுனர் குழு ஆய்வுக்கூட்டம், மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், மாநகராட்சி, மின்வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலை வல்லுனர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து, மாநகராட்சி தலைமை பொறியாளர் மகேசன் கூறியதாவது:
சென்னையில் சேகரிக்கப்படும் குப்பை, கிடங்குகளுக்கு செல்லாமல், முழுமையாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.அதன்படி, சேகரிக்கப்படும் குப்பை தரம் பிரிக்கப்பட்டு உரம், பயோ காஸ், மின்சாரம் ஆகியவற்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். அதன்படி, சேகரிக்கப்படும் குப்பை தரம் பிரிக்கப்பட்டு உரம்,பயோ காஸ், மின்சாரம் ஆகியவற்றை தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பெருங்குடி, கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு பயோ மைனிங் முறையில் அகற்றப்பட்டு, நிலத்தை மீட்கும் பணி நடந்து வருகிறது.அதன்பின், அந்த இரண்டு இடங்களிலும், மறுசுழற்சி கிடங்குகள் அமைக்கப்பட உள்ளன.
அதில், மறுசுழற்சி பயன்படுத்தக்கூடிய பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டு, மறுசுழற்சி நிறுவனங்களுக்கு வழங்கப்படும். மறுசுழற்சி செய்ய முடியாத மட்காத குப்பையில் இருந்து, மின்சாரம் தயாரிப்பதற்காக, கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில், மின் உற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளது.
இந்த ஆலை, 350 கோடி ரூபாயில் அமைக்கப்படும். தினசரி 14 லட்சம் கிலோ குப்பை பயன்படுத்தி, 15 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும். இதில் கிடைக்கும் மின்சாரம், மாநகராட்சி அலுவலகங்களில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த மின் உற்பத்தி ஆலைக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, வல்லுனர் குழுவின் ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது. தமிழக அரசின் நிர்வாக அனுமதி பெற்று, ஒப்பம் கோரப்படும். விரைவில் பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.