சென்னை: இந்த உலகை ரட்சிக்க இயேசு பிரான் அவதரித்த நன்னாளான இன்று உலகம் எங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி, வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு, ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
இயேசு கிறிஸ்து உலகில் அவதரித்த நாளான டிசம்பர் 25ஆம் தேதியான இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்த மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த மாதத்தின் தொடக்கம் முதலே மக்கள் தங்கள் வீடுகளில் முகப்புகளில் நட்சத்திரங்களை தொங்கவிட்டும் கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து பண்டிகையை கொண்டாட தயாராகி வந்தனர்.
இந்நிலையில், இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன. தேவாலயங்களில் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஏராளமான மக்கள் கூடி இருக்கின்றனர். இரவு 11 மணி முதல் அதிகாலை 2 வரை இந்த சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
பல திருச்சபைகளில் அதிகாலை 4 மணிக்கு தொடங்கி காலை 7 மணி வரை பிரார்த்தனைகள் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஏராளமான மக்கள் வருகை தந்தனர். இந்த நிகழ்ச்சியில் சென்னை மயிலை பேராயர் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் மக்களுக்கு சிறப்பு நற்செய்தியை வழங்கினார்.
சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயம் பரங்கி மலையில் அமைந்துள்ள மாதா ஆலயம் பாரிமுனை அந்தோணியார் ஆலயம் எழும்பூர் திருஇருதய ஆலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இது மட்டுமல்லாமல் நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள வேளாங்கண்ணி ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
இதேபோல் தூத்துக்குடி, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்திலுள்ள பல்வேறு பகுதிகளிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது . வழிபாடு முடிவடைந்து கிறிஸ்துமஸ் மக்கள் ஒருவருக்கொருவர் சமாதானத்தை தெரிவிக்கும் வகையில் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டதோடு இனிப்புகளை வழங்கி கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
திண்டுக்கல்லில் 320 ஆண்டுகள் பழமை வாய்ந்த மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை திருத்தலத்தில் 24ஆம் தேதி இன்று( புதன்கிழமை) நள்ளிரவு 11.00 மணிக்கு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் கிறிஸ்துமஸ் பெருவிழா சிறப்பு திருப்பலி துவங்கியது. மேட்டுப்பட்டி பங்குத்தந்தை, நிர்வாகப் பங்குத் தந்தை, உதவி பங்குத்தந்தை ஆகியோரால் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
திருப்பலியின் மையப்பகுதியான நள்ளிரவு 12 மணிக்கு வண்ண விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் பன்னிரண்டு நட்சத்திரங்கள் புடைசூழ நிலாவில் இருந்து இயேசு பாலகன் பிறப்பது போன்ற காட்சி வித்தியாசமான முறையில் செய்யப்பட்டிருந்தது.
ஆலயத்தில் கூடியிருந்தவர்கள் உற்சாகமாய் கைதட்டி ஆரவாரம் செய்தும் கிறிஸ்து பிறப்பு பாடல்களை பாடியும் இயேசுவின் பிறப்பை மகிழ்ச்சியோடு வரவேற்றனர். தொடர்ந்து ஒருவருக்கொருவர் தங்களது கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.இத் திருப்பலியில் அருட் சகோதரர்களஅருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.