திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலுக்கு கூடுதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதை பக்தர்கள் ஆச்சரியமாக பார்த்துச் செல்கிறார்கள்.
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில், தமிழக பக்தர்களுக்கு மட்டுமல்ல, கேரளா மற்றும் கர்நாடக மாநில பக்தர்கள் மத்தியிலும் வெகு பிரசித்தி பெற்று விளங்கும் தலமாக மாறியுள்ளது.
இந்த நிலையில் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயில் மலை மீதும் மலை அடிவாரத்திலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மலை மீது செல்லும் பக்தர்கள் கொண்டு செல்லும் பைகளும் போலீஸாரின் சோதனைக்கு பிறகே எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
பழனி நகரில் மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். டிசம்பர் 6 ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தில் சமூகவிரோதிகள் நாச வேலையில் ஈடுபடலாம் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பழனி முருகன் சிறப்பு: தண்டாயுதபாணி சுவாமிக்கு தினமும் ஆறு முறை அபிஷேகம் நடைபெறும். இந்த அபிஷேகங்கள் ஒவ்வொன்றும் ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்குள் மிகச் சுருக்கமாக நடைபெறும். அபிஷேகம் முடிந்தவுடன் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்படும். இந்த அலங்காரத்துக்குப் பிறகு, அடுத்த அபிஷேகம் நடைபெறும் வரை சுவாமிக்கு மாலை அணிவித்தல், பூக்களால் அர்ச்சனை செய்தல் போன்ற பூஜைகள் செய்யப்படுவதில்லை.
இரவில், தண்டாயுதபாணி சுவாமியின் மார்பில் வட்ட வடிவில் சந்தனக் காப்பு அணிவிக்கப்படும். மேலும், புருவங்களுக்கு இடையில் ஒரு சிறிய பொட்டு வைத்து அலங்கரிக்கப்படுவார். பழங்காலத்தில், சந்தனக் காப்பை சுவாமியின் முகத்தில் முழுமையாக அணிவிக்கும் வழக்கம் இருந்தது. ஆனால், பின்னர் இந்த வழக்கம் மாற்றப்பட்டு, தற்போது மேற்கண்ட முறையிலேயே அலங்காரம் செய்யப்படுகிறது.
தண்டாயுதபாணி சுவாமியின் திரு உருவம் மிகுந்த சூடாக இருப்பதால், இரவு முழுவதும் அதிலிருந்து நீர் வடிந்து கொண்டே இருக்கும். இந்த நீரை அபிஷேக தீர்த்தத்துடன் கலந்து, மறுநாள் காலை நடைபெறும் அபிஷேகத்தின் போது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
Weather Data Source: Wettervorhersage 21 tage