சென்னை: சப் கலெக்டர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, வருவாய் துறை ஆணையர் உள்ளிட்ட பதவிகளுக்காக தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி சார்பில் இன்றைய தினம் குரூப் 1 பிரதான தேர்வு (mains) நடத்தப்படுகிறது. 90 பணியிடங்களுக்காக நடத்தப்படும் இந்த தேர்வை 1888 பேர் எழுதுகிறார்கள்.
தமிழக அரசு தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)குரூப் 1 பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை நிரப்புகிறது. அதாவது சப் கலெக்டர், காவல் துறை டிஎஸ்பி, வணிகவரித் துறை உதவி ஆணையர், கூட்டுறவு துறை துணை பதிவாளர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி பணியிடம் என 90 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது கடந்த மார்ச் 28ஆம் தேதி வெளியிட்டது.
இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூலை மாதம் 13 ஆம் தேதி நடந்தது. இந்த தேர்வை 1.59 லட்சம் பேர் எழுதினர். முதல்நிலைத் தேர்வு முடிவுகள் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி வெளியானது. அதில் தேர்வானவர்கள் மெயின் தேர்வு எழுதுகிறார்கள்.
அந்த வகையில் டிசம்பர் 10ஆம் தேதி முதல் டிசம்பர் 13 ஆம் தேதி வரை இந்த தேர்வு நடைபெறுகிறது. அதன்படி இன்று தமிழகத்தில் தொடங்கும் இந்த தேர்வு 90 பணியிடங்களுக்கு நிரப்பப்படுகிறது. இந்த தேர்வை 1232 ஆண்கள், 655 பெண்கள், 1 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1888 பேர் எழுதுகிறார்கள். இந்த தேர்வு 19 மையங்களில் நடத்தப்படுகிறது.
Weather Data Source: Wettervorhersage 21 tage