சென்னை: சென்னையில் தாயின் மருத்துவ செலவிற்காக வைக்கப்பட்டு இருந்த பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை சைதாப்பேட்டை சின்னமலை 2வது தெருவை சேர்ந்த ஆகாஷ் (வயது 28). இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்திருந்தார். இவரது தந்தை காலமாகிவிட்டார். இதனால் ஆகாஷ் தனது தாயுடன் வசித்து வந்தார்.
ஆகாஷின் தாயும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு புற்றுநோய் தொடர்பான சிகிச்சை என்பது அளிக்கப்பட வேண்டி உள்ளது. இதற்கு அதிக பணம் தேவைப்படும் சூழலில் ஆகாசுக்கு சரியான வேலையும் இல்லை.
கேட்டரிங் வேலைக்கு சென்று வந்த ஆகாசுக்கு போதிய சம்பளம் என்பது கிடைக்கவில்லை. இதனால் அவர் மனவருத்தம் அடைந்துள்ளார். இதற்கிடையே தான் அதிகப்பட்டியான பணம் சம்பாதிக்க அவர் ஆன்லைன் ரம்மி விளையாட தொடங்கி உள்ளார். முதலில் அவருக்கு ஆன்லைன் ரம்மியில் இருந்து பணம் கிடைத்துள்ளது.
இதனால் ஆகாஷ் ஆன்லைன் ரம்மியில் தொடர்ந்து விளையாடியுள்ளார். அவரது தாயின் சிகிச்சைக்கு வைத்திருந்த ரூ.30 ஆயிரம் பணத்தை வைத்தும் அவர் விளையாடி உள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவருக்கு பணம் கிடைக்கவில்லை. தாயின் சிகிச்சைக்கு வைத்திருந்த ரூ.30 ஆயிரத்தை இழந்துள்ளார்.
இதனால் மனவருத்தம் அடைந்த ஆகாஷ் நேற்று தனது வீட்டு மாடியில் உள்ள அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுபற்றி கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.