நம்மில் பலரும் வாரத்தில் 5 அல்லது 6 நாட்கள் வேலைக்கு செல்பவர்களாக இருக்கிறோம். வாரத்தின் எந்த நாளில் பணியாளர்கள் வேலைக்கு செல்ல சோம்பலாக உணர்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் இதற்கான விடை கிடைத்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் வாரத்தின் எந்த நாளில் தொழிலாளர்களிடம் அதிக உற்பத்தி திறன் அல்லது செயல்திறன் காணப்படுகிறது மற்றும் எந்த நாளில் குறைந்த உற்பத்தி திறன் காணப்படுகிறது என்பதை கண்டறிய அவர்களின் கம்ப்யூட்டர் யூசேஜ் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
டெக்சாஸ் ஏ&எம் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்-ஐ சேர்ந்த ஆய்வாளர்கள் இதற்காக சுமார் 789 பணியாளர்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் பணியாளர்களின் டைப்பிங் ஸ்பீட், மவுஸ் ஆக்டிவிட்டி மற்றும் டைப்பிங் எரர்ஸ் உள்ளிட்ட காரணிகள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டன. டெக்சாஸ் ஏ&எம் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்-ஐ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 2 ஆண்டுகளில் 789 ஊழியர்களின் வேலை செய்யும் விதம் குறித்த மேற்கண்ட தரவுகளை ஆய்வு செய்தனர்.
இதில் ஆச்சர்யப்படும் விதமான முடிவுகள் கிடைத்தன. பொதுவாக பணியாளர்கள் அனைவரும் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை முடிந்து திங்கட்கிழமை அலுவலகம் செல்லவே அலுப்பாக, சோம்பேறித்தனமாக உணர்வோம், அதே நேரம் வார இறுதியில் வரவிருக்கும் வார இறுதி விடுமுறையை நினைத்து வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை உற்சாகமாக வேலை செய்வோம் இல்லையா? ஆனால் பிரபலமான இந்த நம்பிக்கைக்கு மாறாக சமீபத்திய இந்த அமெரிக்க ஆய்வு வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை பணியாளர்கள் மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்வதாகவும், வார இறுதியான வெள்ளிக்கிழமையில் குறிப்பாக வெள்ளிக்கிழமை பிற்பகலில் ஊழியர்களின் உற்பத்தி திறன் குறைவாகவும் இருப்பதை வெளிப்படுத்தி உள்ளது.
உற்பத்தித்திறன் மற்றும் பணியாளர் நல்வாழ்வு ஆகியவற்றுக்கு இடையே சரியான சமநிலையை உருவாக்க நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் ஹைப்ரிட் வேலை முறை மற்றும் 4 நாள் வேலை வாரங்கள் போன்ற நெகிழ்வான வேலை ஏற்பாடுகளின் நன்மைகள் குறித்த முக்கியமான கேள்விகளை இந்த ஆய்வின் முடிவுகள் எழுப்புகின்றன.
ரிமோட் மற்றும் ஹைப்ரிட் ஒர்க் மாடல்களில் வேலை செய்யும் முறை பிரபலமாகி வரும் போதிலும், பல ஊழியர்கள் இன்னும் ஆன்-சைட்டில் வேலை செய்கிறார்கள். இதனிடையே இந்த ஆய்வு பற்றி பேசிய ஆய்வாளர் டாக்டர். டேஹ்யூன் ரோ, எங்கள் ஆய்வின் மூலம் திங்கள் முதல் வியாழன் வரை கம்ப்யூட்டர் உபயோகத்தில் தொழிலாளர்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதாக தெரிகிறது. எனினும் வெள்ளிக்கிழமைகளில் பணியாளர்களின் உற்பத்தி திறன் கணிசமாக குறைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
Canon USA நடத்திய வித்தியாசமான கணக்கெடுப்பில் இருந்து சில சுவாரஸ்யமான தகவல்கள் தெரிய வந்துள்ளன. அதன்படி சுமார் 28% தொழிலாளர்கள் திங்கட்கிழமை தங்களின் அதிக உற்பத்தி நாளாக கருதி சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள். குறிப்பாக உள்முக சிந்தனையாளர்கள் தங்களது உச்ச உற்பத்தித்திறனை வெளிப்படுத்த வாரத்தின் தொடக்க நாளை பயன்படுத்தி கொள்ள விரும்புகிறார்கள். அதே போல பொதுவாக பிற்பகல் நேரங்களில் பணியாளர்கள் சுறுசுறுப்பாக இருப்பதில்லை என்றும், குறிப்பாக வெள்ளிக்கிழமை பிற்பகல்களுக்கு மேல் எழுத்துப் பிழைகள் அதிகம் ஏற்படுவதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கிடையே அமெரிக்காவில் நடத்தப்பட்டதை போல கனடா, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் நடத்தப்பட்ட இதே போன்ற ஆய்வானது குறைந்த நாளில் அதிகமணி நேரம் வேலை செய்யும் முறையான compressed workweek சோர்வு குறைய மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம், வேலை திருப்தி அதிகரிக்க காரணமாக இருப்பது தெரிய வந்தது.