செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே புகழ் பெற்ற திருப்போரூர் கந்தசுவாமி கோவில் உண்டியலில் பக்தர் ஒருவர் தனது விலை உயர்ந்த ஐபோனை தவறுதலாக போட்டு உள்ளார். இந்த நிலையில் உண்டியலில் விழுந்த அனைத்தும் முருகனுக்கே சொந்தம் என அதிகாரிகள் கூறியதால் தனது போனை திருப்பித் தரும்படி மனு அளித்திருக்கிறார் அந்த பக்தர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் கந்தசுவாமி கோவில் உள்ளது. நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த கோவில் அறுபடை வீடுகளுக்கு ஒப்பானதாக கருதப்படுகிறது. போரியூர், செருபுரி என பல பெயர்களால் அழைக்கப்படும் இங்கு முருகப் பெருமான் அசுரர்களுக்கு எதிராக போரிட்ட தலமாக கருதப்படுகிறது.
குறிப்பாக கந்தசஷ்டி தொடர்பான முக்கிய நிகழ்வுகள் இங்கு நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த முருகனை வேண்டிக் கொண்டால் குழந்தை பேரு கிடைக்கும், வேலை கிடைக்கும், நீண்ட நாள் நிறைவேறாத காரியங்கள் கைகூடும் என்பது நம்பிக்கை.
இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். சாதாரண நாட்களில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில் திருவிழா காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்வார்கள். தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிய முருகப் பெருமானுக்கு பல்வேறு காணிக்கைகளை பக்தர்கள் செலுத்துவது வழக்கம்.
குறிப்பாக திருமணம் நடைபெற்றவர்கள் தாலி, வேலை கிடைத்தவர்கள் முதல் மாத சம்பளம், கண்மலர், வேல், நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் என உண்டியலில் போடுவார்கள். இதற்காக கோவிலின் பல்வேறு பகுதிகளில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உண்டியல்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இங்கு உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் திருப்போரூர் கந்தசாமி கோவிலில் ஆறு மாதங்களுக்கு பிறகு கோயில் உண்டியல் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜலட்சுமி, செயல் அலுவலர் குமரவேல் முன்னிலையில் திறக்கப்பட்டது. பக்தர்கள் செலுத்திய காணிக்கை தொகை எண்ணப்பட்ட நிலையில் 52 லட்சம், 789 கிராம் தங்கம், 6970 கிராம் வெள்ளி உள்ளிட்டவை பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் உண்டியலை திறந்து பணத்தை எடுத்த போது அதில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐ போன் ஒன்று கிடைத்தது. யாருடைய செல்போன் என்று விசாரித்த போது அது சென்னையில் வசிக்கும் தினேஷ் என்பவரது செல்போன் எனவும், அவர் சென்னை சிஎம்டிஏ அலுவலகத்தில் பணியாற்றி வருவதும் தெரிய வந்தது. கடந்த அக்டோபர் மாதம் 18ஆம் தேதி தினேஷ் தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனத்திற்கு வந்திருக்கிறார். தரிசனம் செய்த பிறகு உண்டியலில் பணம் போட முயன்ற போது அவரது ஐபோன் உண்டியலில் விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர் இது தொடர்பாக கோவில் நிர்வாகத்தினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கிறார்.
இந்நிலையில் கோயில் உண்டியல் திறக்கப்படும் தகவலை அறிந்து கோவிலுக்கு வந்த அவர் தனது செல்போனை தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால் கோயில் உண்டியலில் விழுந்த அனைத்து பொருட்களும் முருகனுக்கு சொந்தமானது, உங்கள் செல்போனை தர முடியாது வேண்டுமென்றால் உங்கள் டேட்டாக்களை காப்பி செய்து கொள்ளுங்கள் என கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது செல்போனை மீட்டு தர வேண்டும் என சென்னை இந்து சமய அறநிலையத்துறையில் மனு அளித்துள்ளார். இந்த நிலையில் அவர் அளித்த மனுவின் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தப்பட்டு செல்போனை ஒப்படைப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கலாம் என அனுப்பி வைக்கப்பட்டார்.