டெல்லி: பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்தல், விவசாயிகளுக்கான இழப்பீட்டு தொகையை அதிகரித்தல் என பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி இன்று டெல்லி நோக்கி ஹரியானா விவசாயிகள் பேரணியை தொடங்க இருக்கின்றனர். இதனை தடுக்க டெல்லி-ஹரியானா எல்லையான ஷம்பு பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
பாஜக மத்தியில் ஆட்சிப்பொறுப்பு ஏற்றதிலிருந்து விவசாயிகள் தங்களின் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக அவர்கள் நடத்தியிருந்த போராட்டம் மத்திய அரசை ஒரு கை பார்த்துவிட்டது என்றே சொல்லலாம். மத்திய அரசா? விவசாயிகளா? என்று நீண்ட அந்த போராட்டத்தில் ஏராளமான உயிர்களை பலி கொடுத்து, இறுதியில் விவசாயிகள் வென்றனர். வேளாண் சட்டங்கள் மூன்றும் திரும்ப பெறப்பட்டன.
இப்படி இருக்கையில் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யக்கோரியும், அதை உறுதி செய்ய வலியுறுத்தியும் விவசாயிகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இன்று ஹரியானாவிலிருந்து விவசாயிகள் ஒன்று திரண்டு நாடாளுமன்றத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளனர். இதனை தடுக்க ஹரியானா-டெல்லி எல்லையான ஷம்பு பகுதியில் ஏராளனமான பேரிகார்டுகளை அமைத்து, போலீசார் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதியம் 1 மணியளவில் விவசாயிகளின் பேரணி தொடங்குகிறது. இந்த வாரத்தில் நடபெறும் இரண்டாவது பேரணி இதுவாகும். ஏற்கெனவே இரு நாட்களுக்கு முன்னர் உத்தரப் பிரதேசத்திலிருந்து ஒரு விவசாய குழுவினர் பேரணியை தொடங்கியிருந்தனர். தற்போது அந்த விவசாயிகளை போலீசார் நொய்டாவில் தடுத்து நிறுத்தியுள்ளனர். விவசாயிகள் அனைவரும் 'சம்யுக்த கிசான் மோர்ச்சா' எனும் அமைப்பின் கீழ் அணிதிரண்டிருக்கின்றனர்.
பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை என்பதை தாண்டி, விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம், மின்சாரக் கட்டண உயர்வு, வேளாண் சட்டங்களை எதிர்த்த போராட்டங்களின்போது போலீசார் போட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், உ.பியின் லக்கிம்பூர் கெரி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.
விவசாயிகளின் இந்த பேரணிக்கு இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன. ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தும் திட்டமிட்ட அரசியல் தாக்குதல் என இப்பேரணைியை மத்திய அரசு விமர்சித்துள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage