லண்டன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
துவக்க வீரர் குவாஜா (0) ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். மற்றொரு துவக்க வீரரான வார்னர் 43 ரன்னில் அவுட் ஆனார். அடுத்துவந்த லபுஷேன் 26 ரன்னில் அவுட் ஆனார். ஆஸ்திரேலிய அணி 76 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்த விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட் சதம் விளாசினார். ஸ்மித் அரைசதம் விளாசினார். இறுதியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்துள்ளது. டிராவிஸ் ஹெட் 146 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 95 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதனிடையே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இடம்பெறவில்லை. இந்திய அணியில் அஸ்வின் இடம்பெறாததற்கு நெட்டின்சன்கள் கடும் விமர்சனம் செய்துள்ளனர்.
ஆஸ்திரேலிய பேட்டிங்கில் அதிக அளவில் இடதுகை பேட்ஸ்மென்கள் இருக்கும்போது இடதுகை பேட்ஸ்மென்களுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசும் அஸ்வின் இந்திய அணியில் இடம்பெறாததற்கு பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர். டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் உலகின் நம்பர் 1 வீரராக உள்ள அஸ்வின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் அணி தேர்வு குழுவுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அஸ்வினை அணியில் சேர்க்காததற்கு காரணம் குறித்து இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பரஸ் ஹம்ப்ரே விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், அஸ்வின் போன்ற சாம்பியன் பந்துவீச்சாளரை அணியில் இருந்து நீக்குவது மிகவும் கடுமையான முடிவு. காலையில் ஆடுகளத்தின் தன்மை, சூழ்நிலையை பார்க்கும்போது கூடுதலாக வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தால் சாதகமாக இருக்கும் என்று நினைத்தோம். கடந்த காலங்களில் இந்த முடிவு எங்களுக்கு சாதகமாக இருந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் எங்களுக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளனர். ஆனால், கூடுதல் சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தால் பலன் அளித்திருக்கும் என நீங்கள் நினைக்கலாம் ஆனால், ஆடுகள சூழ்நிலையை பார்த்து நாங்கள் இந்த முடிவு எடுத்தோம்' என்றார்.