சாம்சங் இந்தியா தொழிற்சங்க பதிவு.. 6 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்! நீதிமன்றம் உத்தரவு

post-img

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள சாம்சங் தொழிற்சாலையில், தொழிற்சங்கம் அமைக்க சிஐடியு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் நிர்வாகம் ஒத்துழைக்கவில்லை. இந்நிலையில் சங்கம் அமைப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
தொழிற்சாலைகளில் சங்கம் அமைப்பது என்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். ஆனால், தொழிற்சாலை நிர்வாகங்கள் சங்கம் அமைப்பதை விரும்புவதில்லை. ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையிலும் இதே பிரச்னைதான். அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அடிப்படை உரிமைகள் புறக்கணிக்கப்படுவதாகவும், 8 மணி நேரத்திற்கும் அதிகமாக வேலை வாங்கப்படுகிறது என்றும், ஆனால் அதற்கான முறையான ஊதியம் வழங்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து சிஐடியு தலைமையில் 'சாம்சங் இந்தியா' என்கிற பெயரில் தொழிற்சங்கத்தை உருவாக்கினர். இந்த சங்கத்தை பதிவு செய்ய கோரி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் விண்ணப்பித்துள்ளனர். பொதுவாக இப்படி வரும் விண்ணப்பங்கள் குறித்து ஒரு சில நாட்களில் முடிவெடுக்கப்பட வேண்டும். இதுதான் நடைமுறை. ஆனால், சாம்சங் இந்தியா விஷயத்தில் தொழிலாளர் நல ஆணையம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இது குறித்து சிஐடியு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மறுபுறம் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தலைமையில் திடீரென தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதில் தொழிற்சங்கம் எதுவும் வேண்டாம் என்று தொழிலாளர்கள் கூறிவிட்டதாக செய்திகள் பரவின. இதற்கு சிஐடியு மறுப்பு தெரிவித்திருந்தது. பெரும்பாலான தொழிளாலர்கள் தங்கள் பக்கம் இருப்பதாகவும், எனவே தொழிற்சங்கத்தை அமைத்தே தீர வேண்டும் எனவும் சிஐடியு வலியுறுத்தியிருந்தது.
இப்படி இருக்கையில் நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு விசாரணை சூடுபிடிக்க தொடங்கியது. சாம்சங் என்கிற பெயரை பயன்படுத்துவதை நிர்வாகம் விரும்பவில்லை. எனவேதான் தொழிற்சங்க பதிவை நிறுத்தி வைத்திருக்கிறோம் என்று தொழிலாளர் நல ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த சங்கத்தை பதிவு செய்ய கோரிய மனு மீது 6 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று தொழிலாளர் நல பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. எனவே விரைவில் சங்கம் பதிவாகிடும் என்று சிஐடியு தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Post