வந்தே பாரத்தை விடுங்க.. எல்லா ரயில் டிக்கெட்டிலும் சலுகை! எத்தனை சதவீத தள்ளுபடி கிடைக்கும் தெரியுமா?

post-img

டெல்லி: நமது நாட்டில் மக்கள் பெரும்பாலும் ரயில் மூலமாகவே நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்கிறார்கள். ஆனால், ரயில் டிக்கெட்கள் தள்ளுபடியில் விற்கப்படுவது பலருக்கும் தெரியாது. இதை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வே நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார். எவ்வளவு தள்ளுபடி.. ஆண்டுக்கு எவ்வளவு தொகை என்பது குறித்த தகவல்களை நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் தொலைதூர பயணங்களுக்கு இப்போதும் ரயில்கள் தான் முக்கியமான சாய்ஸாக இருக்கிறது. படுத்துக் கொண்டே பயணிக்கலாம், டாய்லெட் எனப் பல வசதிகள் இருப்பதால் மக்கள் இதையே தேர்வு செய்கிறார்கள்.
முக்கிய ரூட்களில் விழாக் காலங்களில் ரயில் டிக்கெட்களை புக் செய்வது குதிரைக் கொம்பாகவே இருக்கும். நொடிகளில் டிக்கெட்கள் எல்லாம் விற்றுத் தீர்ந்துவிடும்.
ரயில் டிக்கெட்: இது ஒரு பக்கம் இருக்கா.. அதேநேரம் இந்திய ரயில்வே தனது ரயில் டிக்கெட்களை தள்ளுபடி செய்து விற்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏது தள்ளுபடியா.. ஏற்கனவே இருந்த முதியோர் தள்ளுபடியைக் கூட ரத்து செய்துவிட்டார்களே.. பிறகு என்ன தள்ளுபடி என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். ஆனால், அதுதான் உண்மை. ரயில்வே டிக்கெட்களில் கணிசமான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
46% தள்ளுபடி: இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷணவ் நாடாளுமன்றத்தில் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது ஒவ்வொரு ரயில்வே டிக்கெட்டிற்கும் சுமார் 46 சதவீத டிஸ்கவுண்டில் விற்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இதற்கான தொகையை ரயில்வே துறை தான் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஏசி, நான் ஏசி என்று இல்லாமல் அனைத்து பயணிகளுக்கும் இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறை மானியமாக ரூ.56,993 கோடியை வழங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
46 சதவீத தள்ளுபடி என்றால் உங்கள் ரயில் டிக்கெட்டின் அசல் விலை ரூ.200 என்றால், அது பயணிகளுக்கு வெறும் ரூ.108க்கு விற்கப்படுகிறது.. மீதி 92 ரூபாய் அதாவது 46 சதவிகிதத்தை மானியமாக ரயில்வே துறை வழங்குகிறது. அதாவது உதாரணமாக நீலகிரி எக்ஸ்பிரஸில் சென்னையில் இருந்து கோவைக்கு சாதாரண படுக்கை வசதிக்குக் கட்டணமாக ரூ.325 வசூலிக்கப்படுகிறது. ஆனால், இதன் அசல் விலை என்பது சுமார் 600 ரூபாய் ஆகும். அதில் ரூ. 325 மட்டுமே பயணிகளிடம் வசூலிக்கப்படும் நிலையில், மீத தொகையை ரயில்வே மானியமாக வழங்குவதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
அஸ்வினி வைஷ்ணவ்: முதியோர் சலுகை உள்ளிட்ட ரயில் பயணிகளுக்கு நிறுத்தப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்குவது குறித்த கேள்விக்கு மக்களவையில் பதிலளித்துப் பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "இப்போதே 46% தள்ளுபடியில் தான் ரயில்வே டிக்கெட் விற்கப்படுகிறது. அதாவது ரயில் டிக்கெட்டின் விலை ரூ. 100 என்றால், அதற்கு மக்களிடம் இருந்து ரூ. 54 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ரூ.46 தள்ளுபடி செய்யப்படுகிறது. இப்படி ஒவ்வொரு ஆண்டும் இந்திய ரயில்வேயால் அனைத்து வகுப்பு பயணிகளுக்கும் மொத்தம் ரூ.56,993 கோடி மானியம் வழங்கப்படுகிறது" என்றார்.
இதற்கிடையில், ரேபிட் ரயில் சேவை குறித்த மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "குஜராத்தின் புஜ் மற்றும் அகமதாபாத் இடையே ஏற்கனவே நமோ பாரத் விரைவு ரயில் போன்ற ரேபிட் ரயில்வே ஏற்கனவே தொடங்கியுள்ளோம். பயணிகளின் வரவேற்பு அதிகமாகவே இருக்கிறது. மேலும், சர்வீஸ் சிறப்பாக இருப்பதாகவே பயணிகள் குறிப்பிடுகிறார்கள்" என்றார்.

Related Post