சென்னை: சென்னை அயனாவரத்தில் 21 வயது நிரம்பிய மனவளர்ச்சி குன்றிய 21 வயது கல்லூரி மாணவியை 7 க்கும் அதிகமானவர்கள் லாட்ஜில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பாக தமிழக காவல்துறையை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சனம் செய்தார். இந்நிலையில் தான் புலன் விசாரணை சவாலாக இருக்கிறது. சாட்சியங்களை கலைத்து விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தலாம் என்பதால் பொதுவெளியில் விமர்சிக்க வேண்டாம் என்று சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் மனவளர்ச்சி குன்றியவர். தற்போது இந்த இளம்பெண் கல்லூரி ஒன்றில் இறுதியாண்டு இளநிலை படிப்பை படித்து வருகிறார். இவர் ஆட்டோவில் கல்லூரிக்கு சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்நிலையில் தான் கல்லூரி மாணவியின் நடத்தையில் பெற்றோர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் மாணவியின் செல்போனை எடுத்து பார்த்தனர். அப்போது சிலர் மாணவிக்கு ஆபாசமாக மெசேஜ் செய்திருப்பது தெரியவந்தது. இதுபற்றி மாணவியின் பெற்றோர் அயனாவரம் மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
இந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது கல்லூரி மாணவிக்கு சமூக வலைதளமான ஸ்நாப்சாட் மூலம் சிலர் நண்பர்களாகி உள்ளனர். இதில் அவரது கல்லூரியில் படிக்கும் மாவணவரும் ஒருவர். அவர் மூலம் மேலும் 3 பேர் நண்பர்களாகி உள்ளனர்.
அதன்பிறகு அவர்கள் மாணவியை சந்திக்க வேண்டும் என்று கூறி தனியார் லாட்ஜிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மாணவி மனவளர்ச்சி குன்றியவர் என்பதை சாதகமாக பயன்படுத்தி தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர். மொத்தம் 7 க்கும் அதிகமானவர்கள் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக அயனாவரம் மகளிர் போலீசார் 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கல்லூரி மாணவர் ஒருவர், பள்ளி மாணவர் ஒருவர் என மொத்தம் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இதற்கிடையே தான் இந்த விவகாரத்தில் காவல்துறை அலட்சியம் காட்டுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பிற அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு பற்றி சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை சார்பில், ‛‛டிசம்பர் 6 ம் தேதியே 9 சட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர் ஒருவரும், பள்ளி மாணவர் ஒருவரும் கைது செய்யபப்ட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் மனவளர்ச்சி குன்றியவராக இருப்பதால் புலன் விசாரணை சவாலாக இருக்கிறது. 4 சிறப்பு படைகள் அமைத்து புலன் விசாரணை துரிதப்பட்டு வருகிறது. சாட்சியங்களை கலைத்து, விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தலாம் என்பதால் பொதுவெளியில் விமர்சிக்க வேண்டாம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage