டெல் அவிவ்: இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டைத் தாண்டியும் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே தங்களிடம் உள்ள பணைய கைதிகளை மீட்க இஸ்ரேல் எதாவது முயன்றால் நொடியும் யோசிக்காமல் அவர்களைக் கொன்றுவிடுவோம் என்று ஹமாஸ் மிரட்டல் விடுத்துள்ளது. இதன் காரணமாக அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் ஓராண்டிற்கு மேலாக மோதல் போக்கு நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட போதிலும் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே இதுபோல எந்தவொரு அமைதி ஒப்பந்தமும் ஏற்படவில்லை.
மோதல்: இதனால் இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது. ஹமாஸ் தலைவர் சின்வார் கொல்லப்பட்ட போதிலும், ஹமாஸை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் காசாவில் உள்ள அப்பாவி பாலஸ்தீனர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் படை இப்போது பகீர் மிரட்டலை விடுத்துள்ளது.
அதாவது இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பலர் பணைய கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் இப்போது காசாவில் தான் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே காசாவில் உள்ள இஸ்ரேல் பணயக் கைதிகளை மீட்கும் நடவடிக்கையை மேற்கொள்ள இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தங்கள் தகவல் கிடைத்துள்ளதாகவும் அப்படி எதாவது நடவடிக்கை எடுத்தால் பணைய கைதிகள் அனைவரும் கொல்லப்படுவார்கள் என்றும் ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹமாஸ் மிரட்டல்: இது தொடர்பாக ஹமாஸ் ஒரு அறிக்கையே வெளியிட்டுள்ளது. அதில் இஸ்ரேல் பணைய கைதிகளைக் கொன்றால் என்னவாகும் என்ற விளைவுகள் குறித்து கருத்தில் கொள்ள வேண்டாம் என்றும் தனது உறுப்பினர்களிடம் கூறியிருக்கிறது. இஸ்ரேல் மீட்பு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தாக்குதல் நடத்தப்படும் என்றும் அதற்கு இஸ்ரேல்தான் பொறுப்பாகும் என்றும் ஹமாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஹமாஸின் ராணுவ பிரிவான இஸ் எல்-தீன் அல்-கஸ்ஸாம் படை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக ஹமாஸ் மூத்த தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம் இஸ்ரேல் எந்த பகுதியில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது என்பது குறித்த தகவல்களைப் பகிர அவர் மறுத்துவிட்டார். இந்த அறிக்கைக்கு இஸ்ரேல் தரப்பில் இதுவரை எந்தவொரு பதிலும் இல்லை.
இஸ்ரேல்: அதேநேரம் முன்னதாக மோதல் குறித்து இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் காட்ஸ் கூறுகையில், "இப்போது ஹமாஸ் மீது அழுத்தம் அதிகரித்து வருகிறது. இந்த முறை உண்மையில் நாங்கள் பணய கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தை முன்னெடுக்க முடியும்" என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னணி: கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் எல்லை கடந்து இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், 250க்கும் மேற்பட்டோர் பணயக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். அதன் பிறகு ஹமாஸ் மீது இஸ்ரேல் போரை ஆரம்பித்த நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 44,500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Weather Data Source: Wettervorhersage 21 tage