தமிழ்நாட்டில் 2021-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுகவின் மகளிருக்கு ரூ1,000 உதவித் தொகை திட்டம் எனும் வாக்குறுதி பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு எப்போது செயல்படுத்தும் என்பது எதிர்க்கட்சிகளின் கேள்வியாக இருந்தது. தமிழ்நாடு அரசு பல்வேறு சூழ்நிலைகளை ஆராய்ந்து வரும் செப்டம்பர் 15-ந் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்; இத்திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் எனவும் பெயரிட்டது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெறும் தகுதியானவர்கள் குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. இதற்கான விண்ணப்பங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. கடந்த 7-ந் தேதி இத்திட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இத்திட்டத்தின் கீழ் 1 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கில் மாதம் ரூ1,000 நேரடியாக செலுத்தப்படும். இதற்காக ரூ7,000 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களை பதிவு செய்வதற்காக மொத்தம் 35,923 முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.