ராகுல் காந்தி என்னிடம் சத்தம் போட்டு மோசமாக நடந்துகொண்டார்.. பாஜக பெண் எம்.பி பரபரப்பு புகார்!

post-img
டெல்லி: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த பாஜக பெண் எம்பி புகார் அளித்துள்ளார். நாகாலாந்து பாஜக எம்.பி பாங்னோன் கொன்யாக் மாநிலங்களவை தலைவரிடம் புகார் அளித்துள்ளார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது தன் அருகே வந்து ராகுல் காந்தி சத்தமிட்டதாக புகாரில் தெரிவித்துள்ளார். அரசியல் சாசன சட்டம் குறித்து சிறப்பு விவாதம் கடந்த 17 ஆம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவையில் நடைபெற்றது. அந்த விவாதத்தின் முடிவில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய கருத்து நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வயநாடு எம்.பி பிரியங்கா காந்தி, தி.மு.க எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர், அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து நேற்று போராட்டம் நடத்தினர். அதோடு அமித்ஷாவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். இன்று மீண்டும் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமித்ஷா பேசியதற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நீல நிற உடை அணிந்து வந்து போராட்டம் நடத்தினர். அதேநேரத்தில் பாஜகவினரும் போட்டி போராட்டம் நடத்தினர். அப்போது இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் தனது மண்டை உடைந்ததாக பா.ஜ.க எம்.பி பிரதாப் சாரங்கி குற்றம்சாட்டினார். இது குறித்து பிரதாப் சந்திர சாரங்கி செய்தியாளர்களிடம் பேசுகையில், "என் மீது விழுந்த எம்.பி ஒருவரை ராகுல் காந்தி தள்ளினார். அவர் என் மீது விழுந்தபிறகு பிறகு நான் கீழே விழுந்தேன்" எனத் தெரிவித்துள்ளார். பிரதாப் சாரங்கி தலையில் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாஜக எம்.பி முகேஷ் ராஜ்புத்தும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் பாஜக எம்.பிக்களின் குற்றச்சாட்டை ராகுல் காந்தி மறுத்துள்ளார். ராகுல் கூறுகையில், "இது தொடர்பான காட்சிகள் சிசிவி கேமராவில் பதிவாகி இருக்கும். நான் நாடாளுமன்ற நுழைவு வாயில் வழியாக உள்ளே செல்ல முயன்றபோது, பா.ஜ.க எம்.பிக்கள் என்னை தடுத்து, தள்ளிவிட்டு, மிரட்டல் விடுத்தனர். அதனால் மல்லிகார்ஜுன் கார்கே அவர்களை எதிர்த்து தள்ளினார். இதனால் இந்த சம்பவம் நடந்தது." எனத் தெரிவித்தார். இதற்கிடையே இந்தப் போராட்டத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியால், தனது கண்ணியம் மற்றும் சுயமரியாதை மிகவும் புண்படுத்தப்பட்டுள்ளதாக பாஜகவைச் சேர்ந்த பெண் எம்.பி ஒருவர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நாகாலாந்து மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பா.ஜ.கவை சேர்ந்த பாங்னான் கோன்யாக். இவர் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது புகார் கூறி மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜெகதீப் தன்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "மகர் துவார் பகுதியில் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம். நான் படிக்கட்டுக்கு அருகில் என் கையில் பதாகையுடன் நின்றுகொண்டிருந்தேன். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மற்ற எம்.பி.க்களுடன் திடீரென அங்கு வந்தார். பிறகு குரலை உயர்த்தி என்னை தாக்க முற்பட்டார். ஒரு பெண் எம்.பியான எனக்கு மிக அருகில் வந்தார். அது எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த என்னிடம் ராகுல் காந்தி தவறாக நடந்துகொண்டதன் காரணமாக எனது கண்ணியம் மற்றும் சுயமரியாதை ஆழமாக காயப்படுத்தப்பட்டுள்ளது" என்று புகார் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி மீது பாஜக பெண் எம்.பி புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மத்தியில், ராகுல் காந்தி மீது நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்தில் பாஜக கூட்டணி எம்.பி.க்கள் அனுராக் தாக்கூர், பன்சுரி சுவராஜ் உள்ளிட்டோர் புகார் அளித்துள்ளனர். ராகுல் காந்தி பாஜக எம்.பிகளை தாக்கியதாக அவர்கள் புகாரில் தெரிவித்துள்ளனர். இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Post