சென்னை: திமுக கூட்டணியை உடைக்க முயற்சி செய்ததால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து அதன் துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜூனாவை 6 மாத காலத்துக்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடந்து ஆதவ் அர்ஜூனாவை விமர்சித்து விசிகவின் மற்றொரு துணைப் பொதுச்செயலாளரான வன்னி அரசு தொடர்ச்சியாக சமூக வலைதளப் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
ஆதவ் அர்ஜுனா தொகுத்த அம்பேத்கர் குறித்த நூலை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் வெளியிட்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய், ஆதவ் அர்ஜூனா திமுகவை விமர்சித்திருந்தது பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதால் ஆதவ் அர்ஜூனா கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார் என அறிவித்தார்.
இதற்கு பதில் அளித்த ஆதவ் அர்ஜூனா, 'ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை' என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த மக்களுக்கான அதிகாரத்தைத் தட்டிப்பறிக்கும் அந்த மனநிலையை எதிர்காலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் உடைத்தெறிவேன் என்றார்.
ஆதவ் அர்ஜூனாவின் இந்த பதிவுக்கு விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, திருமாவளவனின் கவிதை ஒன்றை திருத்தம் செய்து பதிலடி தந்தார். அத்துடன் நிற்காமல் வன்னி அரசு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், மன்னர் ஆட்சி' குறித்து தவறாக பேசிய ஆதவ் அர்ஜுனா வை கட்சியை விட்டு நீக்கிய பின்..நானும், பேராசான் உம்..( திருமாவளவனும்) எங்கள் இருவருக்கும் பிடித்த பாடலை கேட்டு மகிழூந்தில் பயணித்தோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"திரை உலகக் கலைஞன் அவன்.. திறமையான மனிதன் அவன்.. தலைசிறந்த தலைமைக்கு தகுதியான மனிதன் அவன்..தலைசிறந்த தலைமைக்கு தகுதியான மனிதன் அவன்.... உதயநிதி.. உதயநிதி" என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை புகழும் என்ற பாடலை ரசித்து கேட்டபடியே திருமாவளவனுடன் பயணித்ததாக வன்னி அரசு அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage