பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் திருப்தி அளிப்பதாகவும், அடுத்த கூட்டம் விரைவில் நடைபெறும் என்றும் பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் மூத்ததலைவர் ராகுல்காந்தி, ஐக்கிய ஜனதா தளகட்சித் தலைவர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தாபானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட 20 கட்சிகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பின்பு கட்சித் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். தேச நலனை பாதுகாப்பதற்காக இந்த முன்னெடுப்பு அவசியம் என்று நிதிஷ் குமார் தெரிவித்தார். மத்தியில் ஆளும் பாஜக அரசு தேச நலனுக்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டினார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை நல்ல விளைவைத் தரும் என்று தெரிவித்த ராகுல் காந்தி, எதிர்வரும் ஆலோசனைக் கூட்டத்தில் ஆழமாக அது விவாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்பது தொடர்ச்சியான செயல்முறை என்றும் இங்கிருந்து தொடங்கி முன்னேறும் என்றும் தெரிவித்தார்.
காந்தி தேசத்தை கோட்ஸே நாடாக மாற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று காஷ்மீர் சனநாயக கட்சியின் தலைவரும் மெகபூபா முப்தி தெரிவித்தார்.