வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஃபெர்ண்டலே பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. வடக்கு கலிபோர்னியா கடற்கரை பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பிறகு வாபஸ் பெறப்பட்டது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வடக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
கலிபோர்னியாவின் கடலோர பகுதியான கேப் மெண்டொசினா பகுதியில் இந்த நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டது. சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர். கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். எனினும் சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
முன்னதாக நிலநடுக்கத்தால் வீடுகளில் இருந்த பொருட்கள் அதிர்ந்தன. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. நிலநடுக்கத்தை தொடர்ந்து பல இடங்கள் இருளில் மூழ்கின. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதும் கடலொர பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் இருந்தும் மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அதேபோல, பலரும் உயரமான கட்டிடங்கள் மீது ஏறி சென்று சுனாமி வருவதற்கான அறிகுறிகள் எதுவும் இருக்கிறதா? என பார்த்தனர். எனினும் சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து தற்போது வரை தகவல் எதுவும் இல்லை. மக்களுக்கு தேவையான உதவிகள் செய்ய அவசர குழுவினர் நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பட்டுள்ளதாக கலிபோர்னியா மாகாண அதிகாரிகள் கூறினர்.
Weather Data Source: Wettervorhersage 21 tage