மும்பை: மும்பையில் 60 பயணிகளுடன் சென்ற கப்பல் நடுக்கடலில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. மும்பையில் இருந்து எலிஃபெண்டா தீவுக்கு செல்லும் வழியில் கப்பல் கவிழ்ந்த நிலையில் மீட்பு பணியில் கடற்படை, கடலோர காவல்படை, மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநில தலைநகராக மும்பை விளங்கி வருகிறது. மும்பையில் இருந்து எலிஃபெண்டா தீவுக்கு இன்று கப்பல் புறப்பட்டு சென்றது. நீல்கமல் என்ற பெயர் கொண்ட இந்த கப்பலில் சுமார் 60 பேர் வரை பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த பயணிகள் கப்பல் ஊரான் மற்றும் கராஞ்சா இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று கப்பல் தண்ணீரில் கவிழ்ந்தது. இதனால் கப்பலில் பயணித்த பயணிகள் கடலில் விழுந்து தத்தளித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் கடற்படையினர், கடலோர காவல் படையினர், உள்ளூர் மீனவர்கள் விரைந்து மீட்பு பணியை தொடங்கினர். கப்பல் கவிழ்ந்த இடத்துக்கு படகில் விரைந்து அவர்கள் மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை ஒருவர் பலியான நிலையில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும் கூட இன்னும் 38 பேரின் நிலைமை என்ன? என்பது தெரியவில்லை. அவர்கைள தேடும் பணி தொடர்ந்து வருகிறது.
தற்போதைய சூழலில் 11 கடற்படை படகுகள், மூன்று மரைன் போலீஸ் படகுகள் மற்றும் ஒரு கடலோர காவல்படை கப்பல் உள்ளிட்டவை தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது. அதேபோல் 4 ஹெலிகாப்டர்களும் மீட்பு பணிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.