டெல்லி: நாடு முழுக்க ஆண்டுக்கு இரண்டு முறை தேசிய தேர்வு முகமை மூலம் யுஜிசி நெட் தேர்வு நடத்தப்படும். இதற்கிடையே யுஜிசி நெட் தேர்வுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. அதில் ஜன. 3ம் தேதி முதல் 13ம் தேதி வரை பல்வேறு தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பொங்கல் சமயத்திலும் தேர்வுகள் நடைபெறுவதால் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கல்லூரி உதவி பேராசிரியர், ஜேஆர்ஃப் மற்றும் பிஎச்.டி சேர்க்கை உள்ளிட்டவற்றுக்குத் தகுதித் தேர்வான யுஜிசி நெட் தேர்வு நடத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாற்றும் டிசம்பர் என இரண்டு முறை இந்தத் தேர்வு நடத்தப்படும்.
தொடக்கத்தில் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு மட்டுமே இந்தத் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், பின்னர் முனைவர் படிப்பிற்கான தேர்வுக்கும் இது தகுதித் தேர்வாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. கூடுதலாக முனைவர் பட்டம் படிப்போர் ஜேஆர்எஃப் எனப்படும் கல்வி உதவித் தொகை பெறவும் இந்த தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
அதன்படி கடந்த நவ. மாதம் இந்த தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. இதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 11ம் தேதி வரை பெறப்பட்டது. நாடு முழுக்க பல ஆயிரம் பேர் இந்தத் தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தனர். இந்தச் சூழலில் இப்போது தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. யுஜிசி நெட் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த அட்டவணை பதிவிடப்பட்டுள்ளது.
மொத்தம் 85 பாடங்களுக்கு ஜன. 3ம் தேதி முதல் 16ம் தேதி வரை இந்தத் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படும் பொங்கல் விடுமுறை நாட்களிலும் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வாளர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் எப்போதும் தை திங்கள் முதல் நாள் பொங்கல் நாளாகக் கொண்டாடப்படும். அதைத் தொடர்ந்து திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள் கொண்டாடப்படும். அடுத்தாண்டு ஜன. 14 முதல் 16 வரையிலான நாட்களில் இந்த பண்டிகைகள் கொண்டாடப்படும் நிலையில், ஜன. 15 மற்றும் 16 தேதிகளில் இரு ஷிப்டுகளாக பல்வேறு பாடப்பிரிவுகளில் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
யுஜிசி நெட் தேர்வைப் பொறுத்தவரை பொதுவாகத் தேர்வு எழுதும் மையம் என்பது 8 நாட்களுக்கு முன்பு தான் அறிவிக்கப்படும். அதன் பின்னரே அட்மிட் கார்டும் இணையதளத்தில் வெளியிடப்படும். 8 நாட்களுக்கு முன்புதான் தேர்வு மையம் தெரியும் என்பதால், தொலைவில் தேர்வு மையம் ஒதுக்கப்படும் தேர்வாளர்களுக்குப் பொங்கல் பண்டிகை காரணமாக டிக்கெட் முன்பதிவு செய்வதிலும் கூட சிரமம் ஏற்படலாம் என்றும் சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.
ஜன. 3, ஜன. 6 முதல் ஜன. 10 வரை மற்றும் ஜன. 15, ஜன. 16 தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வு கணினி முறையில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.