சென்னை: 2026 சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி விவகாரத்தில் 'ஆகக் கூடுமானவரை' திமுகவுக்கு நெருக்கடி தருகிறோம் என்ற நினைப்பில் திமுக தலைமையை அதி உச்ச கடுப்பு நிலைக்கு தள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஆதவ் அர்ஜூனாவைத் தொடர்ந்து வன்னி அரசும் திமுகவுக்கு நெருக்கடி தரும் வகையில் பேட்டிகளைக் கொடுத்து வருவதால், போனால் போகட்டும் என்கிற உதறித் தள்ளுகிற மனநிலைக்கு திமுகவை கொண்டு போய் நிறுத்துகிறார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
2026 சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற பேரத்தை முன்வைத்தார். இந்த பேச்சின் பின்னணியில் இருப்பதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான் என்பது அப்பட்டமான ஒன்றாக இருந்தது. ஏனெனில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியானது திடீரென ஆட்சி அதிகாரத்தில் பங்கு என பேசத் தொடங்கியது. குறிப்பாக அந்தக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜூனா, இடைவிடாமல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என அத்தனை மீடியாக்களிலும் பேசினார். இதனை திருமாவளவன் கண்டு கொள்ளாமல் கடந்து சென்றார்.
நடிகர் விஜய் பகிரங்கமாக, விசிகவுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என பேசிய பேச்சால் திருமாவளவனுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் நடிகர் விஜய் கட்சியுடன் கூட்டணி இல்லை; திமுக தலைமையிலான அணியில்தான் நீடிக்கிறோம் என திட்டவட்டமாக சொல்லும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார். திமுகவுக்கு நெருக்கடி தந்த ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் 6 மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் ஆதவ் அர்ஜூனாவே விசிகவை விட்டு வெளியேறியும் விட்டார்.
திமுகவுக்கு நெருக்கடியை தந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக விசிகவுக்குள் போர்க்கொடி தூக்கியவர்கள் வன்னி அரசு, ரவிக்குமார், ஆளூர் ஷா நவாஸ் உள்ளிட்டோர்தான். இவர்களை எல்லாம் திமுக அனுதாபிகள் எனவும் ஆதவ் அர்ஜூனா முத்திரை குத்திரை இருந்தார்.
தற்போது ஆதவ் அர்ஜூனா விட்டுச் சென்ற பணியை தொட்டுத் தொடருகிறார் விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு. வழக்கம் போல திருமாவளவனும் மழுப்பலான பதிலைத் தந்து கொண்டிருக்கிறார்.
வன்னி அரசு திடீரென ஊடகங்களிடம், திமுக கூட்டணியில் 25 தொகுதிகளைக் கேட்போம்; இரட்டை இலக்கத்தில் சட்டசபைக்குள் நுழைய வேண்டும் என நினைக்கிறோம் என்றெல்லாம் போகாத ஊருக்கு வழியை தேடும் பாணியில் பேசிக் கொண்டிருக்கிறார். திமுக கூட்டணியில் பல கட்சிகள் இருக்கின்றன. திமுகவோ 200 தொகுதிகளுக்கும் மேல் வெல்ல வேண்டும் என்ற இலக்கோடு இருக்கிறது. திமுக கூட்டணி கட்சிகளுக்கு சிங்கிள் டிஜிட் தொகுதிகள்தான் கிடைக்க வாய்ப்புண்டு என்பது வெளிப்படையாக தெரிந்த சங்கதிதான்.
ஆனாலும் திமுகவுக்கு நெருக்கடி தருகிறோம் என்ற பாணியில் 25 தொகுதி கேட்போம்; இரட்டை இலக்க டிஜிட்டில் சட்டசபைக்குள் நுழைய போகிறோம் என்றெல்லாம் வன்னி அரசு போன்றவர்கள் பேசுவதும் இதனை கருத்து சுதந்திரம்; இறுதி முடிவு அல்ல- விசிக தலைமையின் முடிவும் அல்ல என்று திருமாவளவன் பேசிவிட்டு நகருவதும் திமுகவை விட்டு விலகி எதிர்முகாமில் இணைய 'சிறுத்தைகள்' தயாராகிவிட்ட பாய்ச்சலுக்கு முன்னோட்டம் என்பது பட்டவர்த்னமாகவே தெரிகிறது என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள். இந்த அணுகுமுறையால் திமுக தலைமை கடும் கொந்தளிப்பில் இருக்கிறது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.