கோவை: விசிக கட்சி திருமாவளவன் கையில் இருக்கிறதா? இல்லை ஆதவ் அர்ஜுனா கையில் இருக்கிறதா? என்றும், விசிக கட்சிக்கு ஒரு தலைவரா அல்லது இரண்டு தலைவரா? என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், விசிக கட்சி தொல் திருமாவளவன் கையில் இல்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிவதாகவும், விஜய் தயாராக இருந்தால் மணிப்பூருக்கு அழைத்து செல்ல தயார் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவையில் இன்று மாலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆனந்த் டெல்டும்டே ஒரு நகர்ப்புற நக்சல். பெரிய லாட்டரி அதிபர் மார்டினுடைய மருமகன் ஆதவ் அர்ஜுனா. இவர் திமுகவில் சபரீசனுக்கு நெருக்கம். இந்த நிகழ்ச்சியை நடத்தியவர் வாய்ஸ் ஆப் காமென் அமைப்பின் தலைவராக இருக்கக்கூடியவர் ஆதவ் அர்ஜுனா. 509 கோடி ரூபாயான அவருடைய மாமனார் பணத்தை எலக்ட்ரோ பாண்ட் மூலமாக திமுகவுக்கு கொடுத்தவர். இவங்க கொடுமையை பாருங்க.
விசிகவுக்கு நிதி வழங்குபவரே இவர் தான். விஜய் அந்த புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் அரசியல் பேசுகிறார். அம்பேத்கர் புத்தகத்தை வெளியிட உங்களுக்கு இந்தியாவில் வேற ஆளே கிடைக்கவில்லையா. விஜய் அந்த புத்தகத்தை வாங்கட்டும், வழங்கட்டும். அரசியல் கருத்து பேசட்டும். அவங்களுக்கு அந்த உரிமை இருக்கு. தமிழகத்தின் அரசியல் போக்கு எந்த அளவுக்கு போகிறது என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். அம்பேத்கர் நிகழ்ச்சியை வைத்து தமிழகத்தில் அரசியல் வியாபாரம் நடக்கிறது என்பதற்கு இந்த நூழ் வெளியீட்டு விழாவே சான்று.
இந்த நிகழ்ச்சிக்கு விசிக தலைவர் திருமாவளவன் நான் பங்கேற்கவில்லை என்று ஒரு காரணத்தை சொல்லி தவிர்த்துவிடுகிறார். ஆனால் அவருடைய துணை பொதுச்செயலாளர் போயிருக்கிறார் என்றால், விசிக கட்சி அண்ணன் திருமாவளவன் கையில் இருக்கிறதா? இல்லை ஆதவ் அர்ஜுனா கையில் இருக்கிறதா?.. விசிக கட்சிக்கு ஒரு தலைவரா அல்லது இரண்டு தலைவரா? கூட்டணியில் இருக்கிற கட்சியை பற்றி பேசிய பிறகு கூட ஒரே கட்சியில் துணை பொதுச்செயலாளரும், தலைவரும் இருக்கிறார்கள் என்றால் எப்படி?
எனவே, இந்த கட்சி தொல் திருமாவளவன் கையில் இல்லை.. லாட்டரி அதிபர் மருமகன் ஆதவ் அர்ஜுனா கையில் இருக்கிறது என்பது தெள்ளத்தெளிவு. அரசியல் தெரியும் எல்லாருக்கும் தெரியும். உங்க கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சியை, ஆளும் கட்சியை உங்க கட்சியை சார்ந்த முக்கியமான ஒருவர் விமர்சனம் செய்கிறார் என்றால் அவர் மீது உங்களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றால், அவர் மீது கை வைக்க திருமாவளன் தயாராக இல்லை.
இது திமுக கூட்டணி எப்படி இருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. குறிப்பாக எல்லாரும் பவரில் இருப்பதால் ஒட்டியிருக்கிறார்கள். பணத்திற்காக ஒட்டியிருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. விஜய் மணிப்பூர் பற்றி பேசுகிறார். நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். விஜய் பேசிக் காமென் சென்சை வளத்துக்கொள்ள வேண்டும். விஜய் தயாராக இருந்தால், நான் அவரை மணிப்பூர் அழைத்து செல்ல தயாராக இருக்கின்றேன். இவ்வாறு அவர் பேசினார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage