கன்னியாகுமரி: பொதுவாகவே நிலத்தில் ஏதேனும் வில்லங்கம் இருந்தால் பத்திரப்பதிவு செய்ய முடியாது. அதேபோல் அங்கீகரிக்கப்படாத மனையை வாங்கினாலும் பத்திரப்பதிவு செய்ய முடியாது. நீர் நிலை ஆக்கிரமிப்புகளை வாங்கியவர்கள், அரசு புறம்போக்கு நிலத்தை தெரியாமல் வாங்கியவர்கள் நிலத்தை பதிவு செய்ய முடியாது. இந்நிலையில் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய மறுத்த சார்பதிவாளரை கொல்ல முயன்றவரை கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் போலீசார் கைது செய்தனர்.
நிலம், வீடு வாங்குவோர் இன்றைய சூழலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். விலை குறைவாக இருக்கிறதே என்று நினைத்து வில்லங்கமான நிலங்களை வாங்கக்கூடாது. ஏனெனில் நிலத்தில் அல்லது வீட்டு மனையில் ஏதேனும் வில்லங்கம் இருந்தால் பத்திரப்பதிவு செய்ய முடியாது. ஏற்கனவே நிலத்தினை பத்திரப்பதிவு செய்திருந்தாலும், பட்டா இருந்தாலும், வில்லங்கம் இருக்கிறது என்றால் பெரிய சிக்கல் ஆகிவிடும்.
உதாரணமாக அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பல வருடமாக குடியிருப்பார்கள். அந்த நிலம் நீர்நிலை இடமாக இருக்கும். சில இடங்கள் வாய்க்கால், அனாதீனம், ஓடை, சாலையோரங்கள் என இருக்கும். இப்படிப்பட்ட இடங்களுக்கு பல வருடங்களாக குடியிருந்தாலும் பட்டா இருக்காது. இப்படிப்பட்ட இடங்களை தற்போதைய நிலையில் பத்திரப்பதிவு செய்ய முடியாது. அதேபோல் நீதிமன்றத்தில் பாகப்பிரிவினை தொடர்பான வில்லங்கம், கூட்டுப்பட்டா தொடர்பான வில்லங்கம், நிலத்தை அளப்பதில் ஏற்பட்ட தவறுகளை கவனிக்காமல் விட்டு பட்டா வாங்கியவர்கள் என பல வில்லங்கம் இருந்தால்,நிச்சயம் அவற்றை பத்திரப்பதிவு செய்வது இன்றைக்கு கடினம் ஆகும். இந்த சூழலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்திரப்பதிவு செய்ய மறுத்த சார்பதிவாளரை ஒருவர் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் சுண்டவிளை பகுதியைச் சேர்ந்த 48 வயதாகும் ஜஸ்டஸ் ஜெஸ்டின் என்பவர் வேறு ஒருவருக்கு சொந்தமான 1 சென்ட் நிலத்தை தனது பெயருக்கு மாற்ற கருங்கல் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு ஜஸ்டஸ் ஜெஸ்டின் சென்றிருக்கிறார். ஆனால் நிலத்தில் வில்லங்கம் இருப்பதாக கூறிய சார்பதிவாளர் ஹரி கிருஷ்ணன் (35) அந்த நிலத்தை பதிவு செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜஸ்டஸ் ஜெஸ்டின், நேற்று மதியம் மதுபோதையில் பெட்ரோல் கேனுடன் அவர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு திடீரென தன்னுடைய உடல் மீது பெட்ரோலை ஊற்றி உள்ளார். பின்னர் கண் இமைக்கும் நேரத்தில், திடீரென பத்திரப்பதிவு செய்ய மறுத்த சார்பதிவாளர் ஹரி கிருஷ்ணன் மீதும் பெட்ரோலை ஊற்றியுள்ளார்.
இதனை பார்த்து அங்குள்ள ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சுதாரித்துக் கொண்டு மது போதையில் இருந்த ஜஸ்டஸ் ஜெஸ்டினை மடக்கி பிடித்துள்ளனர். அவர்கள் உடனடியாக கருங்கல் போலீசாருக்கு நடந்த சம்பவம் குறித்து தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிந்து ஜஸ்டஸ் ஜெஸ்டினை கைது செய்தனர்.நிலத்தை பதிவு செய்ய முடியாது என கூறியதால் சார்பதிவாளரை கொல்லும் நோக்கத்தில் அவர் மீது பெட்ரோல் ஊற்றிய சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage