புத்தாண்டு பலன் 2025: புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. 2025 புத்தாண்டில் ரிஷப ராசிக்காரர்களுக்கு என்னென்ன நற்பலன்கள் கிடைக்கப் போகிறது, எந்தெந்த விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்... (Puthandu palan for rishabam)
ரிஷப ராசிக்காரர்கள் அடுத்தவர்களுக்காக தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்கக் கூடியவர்கள். தன் நலம் கருதாதவர்களாக இருப்பார்கள். இதுவரை 12 ஆவது இடத்தில் குரு பகவான் இருந்தார். 12 இல் குரு என்பது விரைய குரு. எந்த அடிப்படையிலும் பெரிய நல்ல விஷயங்கள் நடக்கவில்லை, தேவையில்லாத செலவுகள் ஏற்படுகிறதே என கவலையடைந்து வந்திருப்பீர்கள்.
10 இல் இருந்த சனி பட்டத்தையும், பதவியையும், பேரையும், புகழையும் தானே கெடுத்தது. கஷ்டப்பட்டும் சரியான வேலை கிடைக்கவில்லையே என்று புலம்பியவர்களுக்கு எல்லாம் மிகச் சிறந்த ஆண்டாக 2025 அமையும். வருடத்தின் தொடக்க காலத்தில் ஜென்ம குருவாக இருந்தாலும் 2025 மே மாதத்திற்குப் பிறகு நடக்கக்கூடிய குருப்பெர்ச்சியால் ராசிக்கு இரண்டாவது இடத்தில் குரு பகவான் வருகிறார்.
இரண்டில் குரு வருவது மிகச் சிறந்த பலன்களைக் கொடுக்கும். குறிப்பாக, எண்ணங்கள், சிந்தனைகள் தெளிவாகும். புதுவிதமாக யோசித்து வைத்து விஷயங்களை செய்து முடித்து ஜெயிப்பீர்கள். குடும்ப வாழ்க்கை என்பது ரிஷப ராசிக்காரர்களுக்கு கடும் அழுத்தத்தை கொடுத்திருக்கும். ரிஷபத்துக்கு ஜென்ம குரு வந்ததால் தனிமையில் வாடியிருப்பீர்கள். இரண்டில் குரு வரும்போது வாக்குக்கு மிகப்பெரிய பலம் கிடைக்கும். நீங்கள் சொல்லும் வாக்குகள் அனைத்தும் பலிக்கும்.
மதிப்பு கூடும்: உதாசினப்படுத்தியவர்கள் உங்களை மதித்து நடப்பார்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மே மாதத்திற்குப் பிறகு இடம் மாற வேண்டும் என நினைப்பவர்களுக்கு கட்டாயம் இடமாற்றம் ஏற்படும். பழைய வீட்டில் இருப்பவர்கள் புது வீட்டுக்கு குடிபெயர்வீர்கள். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தொழிலில் மாற்றம் செய்பவர்களுக்கு நற்பலன்கள் உண்டாகும்.
குறிப்பாக, பிள்ளைகளுக்கு சுப காரியங்கள் செய்து பார்க்கக்கூடிய வருடமாக அமையும். ஐந்தில் இருக்கக்கூடிய கேது 4க்கு பெயர்ச்சி ஆகும்போது பிள்ளைகளுக்கு நல்ல அனுகூலம் உண்டாகும். அதேபோல, பூர்வ புண்ணியத்தால் ஏற்படக்கூடிய பலன்கள் கிடைக்கும். மூதாதையர்கள் சாபம், பித்ரு தோஷம் இருக்கக்கூடிய குடும்பங்களுக்கு நல்ல பலன்கள் உண்டாகும்.
தொட்டது துலங்கும்: ரிஷப ராசிக்காரர்களுக்கு மே மாதத்திற்குப் பிறகு இரண்டில் குரு வருவதால் திருமண யோகம் கூடிவரும். கடந்த காலங்களில் தடைபட்ட திருமணங்கள் அனைத்தும் தடையின்றி நடக்கக்கூடிய சூழல்கள் ஏற்படும். விரும்பியவர்களை மணக்கக்கூடிய சூழல்கள் ஏற்படும். கொடுக்கல், வாங்கல்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். கடன்களை விரைந்து அடிப்பீர்கள்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு புத்தாண்டில் சூப்பரான மாற்றங்கள் நிகழப் போகிறது. பட்டங்கள், பதவிகள், பெயர், புகழில் மாற்றம் ஏற்படும். புதிய பட்டம், புதிய பதவி, புதிய பெயர் வந்து சேரும். கடந்த இரண்டரை வருடங்களாக வேலைகளில் பல்வேறு அலைச்சல்களை, அழுத்தங்களை சந்தித்து வந்திருப்பீர்கள். அந்த சிக்கல்கள் அனைத்தும் மாறும்.
அரசியல் துறையில் அடிமாடு போல உழைத்தாலும் பதவி கிடைக்கவில்லை என்று வருந்துபவர்களுக்கு புதிய பதவி, புதிய பொறுப்பு தேடிவரும். பணம் சார்ந்த விஷயங்களில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். குறிப்பாக 11 இல் இருந்த ராகு 10 இல் வருவதால் மிக யோகமான வருடமாக அமையும். 12 இல் விரையத்தில் ஜென்ம குருவாக இருந்த குரு அடுத்த இரண்டாவது இடத்திற்கு வருகிறார். குரு வக்ர நிவர்த்தியாகி இரண்டில் வருவதால் விரைய செலவுகள் கட்டுக்குள் வரும்.
குலதெய்வ அனுகூலம் ஏற்படும். கோயிலுக்கு போய் வழிபட்டும் எங்களுக்கு சில விஷயங்கள் நடக்கவில்லை என வருந்தியவர்கள் நல்ல விதமான சுப பலன்களை அனுபவிப்பார்கள்.
தொழில் துறை: கலைத் துறையைச் சார்ந்தவர்களுக்கு இந்த ஆண்டு அருமையான ஆண்டாக அமையும். மீடியா துறையில் இருக்கக்கூடியவர்களுக்கு மிகச் சிறந்த ஆண்டு. பேன்சி ஸ்டோர், நகைக் கடை, துணிக் கடை வைப்பவர்களுக்கு ஜாக்பாட்டாக இருக்கும். டிஜிட்டல், யூடியூப் சேனல் ஆரம்பிப்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டாகும்.
மாணவர்கள்: மே மாதம் வரைக்கும் கல்வியில் கவனமாக இருக்க வேண்டும். அதனுடைய பலன்கள் மே மாதத்திற்குப் பிறகு உங்களால் பார்க்க முடியும். மே மாதத்திற்குப் பிறகு கல்வி ஸ்தானத்தில் குரு வருவதால், கல்வியில் நல்ல பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த கல்லூரிகளில் சீட் கிடைக்கும். அரியர்களில் தேர்ச்சி பெறுவீர்கள்.
பெண்கள்: அடிவயிறு சம்பந்தமான பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும். ஆறாம் இடத்துக்கு அதிபதியான சுக்கிரனுக்குரிய நட்சத்திரத்தில் இந்த வருடம் பிறப்பதால் நீர்க்கட்டி தொடர்பான பிரச்னை, புத்திர பாக்கிய பிரச்னைகள் தீரும். குழந்தை பாக்கியம் உண்டாகும். தொழில் முறை சார்ந்த பெண்கள் மே மாதத்துக்குப் பிறகு மிகப்பெரிய வெற்றியைக் காண்பீர்கள்.
பரிகாரங்கள்: பெண் தெய்வ வழிபாடு செய்வது நல்லது. செவ்வாய், வெள்ளிகளில் அம்மன் கோயிலுக்குச் சென்று ஜோடி தீபம் போட்டு வழிபடுவது நல்லது. கோயிலை வலம் வந்து உங்களுடைய எண்ணங்களையும், சிந்தனைகளையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்து வேண்டியதை கேட்டால் கட்டாயமாக நற்பலன்களை கொடுப்பார்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: உங்களுடைய ஜாதகத்திற்கு ராசிக்கு, லக்னத்திற்கு 4வது இடத்தில் கேது வருவதால் தாயின் உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது. தாய் சொல்லும் வார்த்தைகளை கேட்பது நல்லது. விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. இரவு நேரப் பயணங்களில், வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது. தொழில் முறை சார்ந்த விஷயங்களில் மூன்றாவது நபரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது.
ரிஷப ராசிக்காரர்களுக்கு மொத்தத்தில் நான்கு கிரகங்களுமே நல்ல பலன்களைத் தரக்கூடியதாக இருப்பதால் 100க்கு 85 சதவீத நற்பலன்கள் கிடைக்கும். இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக உங்களுக்கு இருக்கும்.
Weather Data Source: Wettervorhersage 21 tage