கடலில் மின்சாரம் எடு.. நிலத்தை எங்களுக்கு கொடு..! : கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கர்ஜித்த சீமான்

post-img
சென்னை: எண்ணூர் அனல்மின் விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து சீமான் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். சென்னையை அடுத்து எண்ணூரில் உள்ள அனல்மின் நிலையத்தை எதிர்த்து வடசென்னை மக்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். அங்கே உள்ள சுற்றுச்சூழல் இதனால் கேடு விளைந்து வருகிறது என அம்மக்கள் பலமுறை போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனிடையே இங்கே ஏற்படும் எண்ணெய் கசிவுகள் மூலம் நிலத்தடி நீர் மற்றும் குடிநீர் குழாய்களில் கலந்து மக்களின் உயிருக்கும் ஆபத்தை உண்டாக்கி வருகிறது என்றும் கூறி அரசிடம் மாற்றுத் திட்டத்தைக் கொண்டுவர வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசு எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டம் வேகப்படுத்தி வருகிறது. சென்னை மக்கள் தொகை பெருக்கத்தைக் கணக்கில் கொண்டு அதை விரிவாக்க என்று ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்பி., சட்டமன்ற உறுப்பினர்கள் அதனை ஆதரித்து வருகின்றனர். இன்று இந்த விரிவாக்கத் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அதில் சீமான் பங்கேற்றுப் பேசினார். பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அவர் பேசினார். அப்போது அவர்,"அனல், புனல், அணு, நிலக்கரி என இப்படி எல்லா மின் உற்பத்தி திட்டங்களும் நாட்டின் வளர்ச்சிக்கானது என்றும் வேலை வாய்ப்புக்கானது என்று சொல்லியே கொண்டுவந்துள்ளார்கள். இந்த வார்த்தைகளைக் கேட்டும் போது இனிப்பாக இருக்கிறது. மின்சாரம் இல்லாமல் எப்படி நாடு வளரும் என்கிறார்கள். மின்சாரம் தயாரிக்க இந்த அனல்மின் திட்டம், அணுமின் திட்டம்தான் இருக்கிறது. அதைவிட்டால் வேறு வழியே கிடையாது எனச் சொல்வதை நாங்கள் மறுக்கிறோம். அணு உலைக்கு மீது அமர்வதும் அணு உலைக்கு அருகில் குடியிருப்பதும் இரண்டும் ஒன்றுதான் என அணு விஞ்ஞானிகளே சொல்கிறார்கள். அதை நாம் அனுமதித்து விட்டோம். அனல்மின் திட்டத்தால் உலர் சாம்பல் பரவி நிலம் எவ்வளவு நாசமாக்கப்பட்டுள்ளது என்பதை நேரடியாகப் போய் ஆய்வு செய்வோம் வாருங்கள். இப்படி உணவு, நீர், நிலம் எல்லாம் நஞ்சான பிறகு மின்சாரம் தரும் விளக்கு வெளிச்சத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோம்? பிணத்தை வைத்துக் கொண்டு அழவேண்டும். ஆகவேதான் ஜப்பான், ஆஸ்திரேலியா, அரபு நாடுகளில் கடல் அலையிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறார்கள். சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கிறார்கள். அதை உங்களால் செய்ய முடியாதா? நெய்வேலி நிலக்கரிக்கான நிலம் கொடுத்தவர் ஜம்புலிங்க முதலியார். அங்கேதான் காமராஜர் நிலக்கரி சுரங்கம் எடுக்கத் திட்டம் வகுத்தார். இன்றைக்கு 60 ஆயிரம் ஏக்கரை நெய்வேலியில் எடுத்துள்ளார்கள். நிலம் நமது. அதன் வளம் நமது. ஆனால், சமீபத்தில் வேலைக்கு எடுத்த 299 பேரில் ஒருவர்கூட தமிழர் இல்லை. ஒருநாள் நிலக்கரி வளம் தீர்ந்துபோகும். அப்போது இந்த அரசு என்ன செய்யும். ஆனால், என்றும் தீராத வளம்தான் காற்றாலை, சூரிய ஒளி, கடல் அலை. அதிலிருந்து ஏன் மின்சாரம் தயாரிக்க அரசு மறுக்கிறது? இதை வைத்து இயற்கை கேடு வராமல் மின்சாரம் தயாரிக்க முடியும். அணு உலை கண்டுபிடிக்கப்பட்டது மின்சாரத் தேவைக்காகவா? அல்லது மின்சாரம் அணு உலை உதவியால் கண்டுபிடிக்கப்பட்டதா? இல்லையே? எனவே இந்த எண்ணூர் அனல்மின் நிலையம் ஆபத்தானது. சுற்றுச்சூழலை கேடாக்கிவருகிறது. அதிலிருந்து வெளியேறும் உலர் சாம்பல் மூச்சுக்காற்றை நஞ்சாக்கி வருகிறது. எனவே அதை விரிவாக்கம் செய்ய அனுமதிக்கக்கூடாது"என்று பேசினார்.

Related Post