யாஹூ 1998ம் ஆண்டு செய்த காஸ்ட்லியான வரலாற்று தவறு.. எப்படி கூகுளின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது

post-img

வாஷிங்டன்: இன்றைக்கு கூகுள் தான் உலகையே தீர்மானிக்கிறது. உலகில் மக்கள் எதை தேட வேண்டும் என்றாலும், யாருக்கு என்ன வேண்டும் என்பதை பார்க்க வேண்டும் என்றாலும் கூகுளில் தான் பார்க்க முடியும். ஒருகாலத்தில் கூகுள் இப்போது உள்ள இடத்தில் யாஹூ தான் இருந்தது. ஆனால் யாஹூ 1998ம் ஆண்டுகளில் எந்த கார்ப்பரேட் நிறுவனமும் செய்யக்கூடாத வரலாற்றில் மிக விலை உயர்ந்த தவறை செய்தது. அதுதான் கூகுளின் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது.
1998 ஆம் ஆண்டில், கார்ப்பரேட் வரலாற்றில் மிகவும் காஸ்ட்லியான ஒரு தவறை யாஹூ நிறுவனம் செய்தது. என்ன தவறு என்கிறீர்களா. இரண்டு இளம் கல்லூரி மாணவர்கள் தங்கள் இணையதளத்தை வாங்குமாறு யாஹூ நிறுவனத்திடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். அதை யாஹூவின் அன்றைய சிஇஒ 'டைம் வேஸ்ட்' என்று நிராகரித்து அவர்களை துரத்தியடித்தார். ஆனால் அந்த இரண்டு மாணவர்கள் அடுத்த 11 ஆண்டுகளில் யாஹூவை இணையதள உலகில் இருந்து துடைத்து எறிந்தனர். யாஹூவின் வீழ்ச்சி எப்படி நடந்தது என்பதை பார்ப்போம்.

கல்லூரிகளில் மாணவர்கள் தகவல்களை தேடுவதற்காக யாஹூ நிறுவனம் கடந்த 1994ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆன்லைனில் தகவல்களைக் கண்டறிய உதவுவதற்காக உருவாக்கப்பட்ட இணையதளம் ஆகும். இந்த யாஹூ 1996ம் ஆண்டு $33.8 மில்லியன் டாலர் என்று மதிப்பிடும் அளவிற்கு மிகப்பெரிய ஆன்லைன் தளமாக மாறியிருந்தது. அந்த நிறுவனத்தை தான் உலகமே பயன்படுத்திக் கொண்டிருந்தது. பணம் அந்த நிறுவனத்திடம் குவிந்து கிடந்தது. மதிப்பும் பெரிய அளவில் இருந்தது. ஆனால் எல்லாவற்றையும் உடைக்க இரண்டு கல்லூரி மாணவர்கள் 1998ம் ஆண்டு புறப்பட்டு விட்டார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது.
கூகுள் 1 மில்லியன் டாலர்: 1998ம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இரண்டு மாணவர்கள், லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஒரு புரட்சிகரமான சர்ச் இன்ஜினை உருவாக்கினர். அவர்களின் புதிய அல்காரிதம் யாஹூவின் தேடலை பழமையானதாக மாற்றியது. ஆனால் அதை பற்றி புரிந்து கொள்ளாத நிலையில் யாஹூ இருந்தது. லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் தங்கள் யோசனையை யாஹூவிற்கு வெறும் $ 1 மில்லியன் டாலருக்கு விற்க முன்வந்தனர்.
டைம் வேஸ்ட்: யாஹூ அவர்களுக்கு அளித்த பதில் என்ன தெரியுமா? டைம் வேஸ்ட்.. என்று கூறி நிராகரித்து விட்டனர். மாறாக, அவர்கள் யாஹூவின் இணையதளத்தில் கூகுள் சர்ச் இன்ஜினை ஒருங்கிணைத்தனர். இந்த வழியில், மக்கள் Google இன் முகப்புப் பக்கத்திற்குப் பதிலாக Yahoo இன் முகப்புப் பக்கத்திற்குச் செல்ல முடியும் என்கிற நிலை இருந்தது. அது அர்த்தமுள்ளதாக அப்போது யாஹூவிற்கு இருந்தது. ஆனால் நாளடைவில் அது யாஹூவிற்கு பேரழிவாக மாறியது... மக்கள் கூகுள் சர்ச் இன்ஜினை விரும்பினர். மேலும் யாஹூவின் தளத்தில் கூகுள் இருப்பதால், கூகுளுக்கு இலவச விளம்பரம் வழங்கப்பட்டது. ஒரு கட்டத்தில் யாஹூ பீதியடைந்து 3 பில்லியன் டாலருக்கு கூகுளை வாங்க முன்வந்தது. ஆனால் கூகுள் நிறுவனம் கேட்டது 5 பில்லியன். ஆனால் யாஹூ மறுபடியும் தவறு செய்தது. அந்த பணத்திற்கு டீலை ஏற்க மறுத்துவிட்டது.

கூகுள் இணையதளம்: இதனிடையே இணையதளங்கள் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்க தொடங்கியது. கூகுள் அதற்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொண்டே இருந்தது. ஆனால் யாஹூ அப்படி இயங்கவில்லை. மெதுவாகவும், துல்லியமற்றதாகவும் இயங்கி ஒரு கட்டத்தில், காலாவதியாக மாறியது. இதனால் விரக்தி அடைந்த மக்கள் கூகுளுக்கு முழுமையாக மாறினார்கள். கூகுள் இணையதளம் ஸ்மார்ட்டாகவும், எளிமையாகவும், பயன்படுத்த எளிதாகவும் இருந்தது. தேடல் முடிவுகள் வேகமாகவும் துல்லியமாகவும் வந்தன.
இதனால் யாஹூ பயனர்களையும் பணத்தையும் வேகமாக இழந்து கொண்டே இருந்தது.
கூகுள் விளம்பரங்கள்: இதற்கிடையில், கூகுள் நிறுவனம் AdWords ஐ இணையதளங்களுக்கு அறிமுகம் செய்ய தயாராகிக்கொண்டிருந்தது. டார்க்கெட் விளம்பரங்களை நேரடியாக தேடல் முடிவுகளில் வைக்க வணிக நிறுவனங்களை கூகுள் அனுமதித்தது. யாஹூவின் clunky banner விளம்பரங்களைப் போலன்றி, கூகுளின் AdWords இயல்பான விளம்பரம் போல் உணரப்பட்டது. அதுவும் இந்த விளம்பரங்கள் எப்படி என்றால், பயனர்கள் கிளிக் செய்தால் மட்டுமே வணிக நிறுவனங்கள் பணம் செலுத்தலாம் என்று புரட்சிகரமாக இருந்தது. இந்த புரட்சிகரமான கூகுளின் திட்டம் சூப்பராக வேலை செய்தது.
கூகுள் வெற்றி: இது போல் கூகுள் நிறுவனம் ஒவ்வொரு தேடலையும், ஒவ்வொருவரின் தேடலையும் பணம் தரும் அட்சயபாத்திரமாக மற்றத்தொடங்கியது. விளம்பரதாரர்கள் மற்றும் பயனர்களுக்கு இடையே நல்ல ஒருங்கிணைப்பை உருவாக்கியதால் கூகுள் பில்லியன் டாலர்களில் பணம் சம்பாதிக்க ஆரம்பித்தது. AdWords திட்டம் தான் கூகுளை யாராலும் தடுக்க முடியாத அளவிற்கு புரட்சிகரமாக நிறுவனமாக மாற்றியது. கூகுள் ஆண்டவராக உருவெடுக்க AdWords திட்டம் தான் காரணமாக அமைந்தது.

யாஹூ வாங்கிய நிறுவனங்கள்: அதேநேரம் கூகுள் பல புதுமையான திட்டங்களை செயல்படுத்தியது. புதுமைகளை உருவாக்கிய போது, யாஹூ வேறு பாதையை எடுத்தது... பயனர்களுக்கு தேவையான சேவைகளை கண்டுபிடிக்கவும், புதுமைகளை உருவாக்கவும் நேரத்தை செலவழிக்காமல், பெரிய நிறுவனங்களை வாங்குவதற்கு நேரத்தை செலவிட்டது. 5.7 பில்லயினுககு http://Broadcast.com. என்ற இணையதளததையும், Tumblr என்ற இணையதளத்தை 1.1 பில்லியன் டாலருக்கும் யாஹூ வாங்கியது.
கூகுள் இந்த சூழலை நன்கு பயன்படுத்திக் கொண்டது... யாஹூ எல்லா இடங்களிலும் தடுமாறிய போது, கூகுள் வளர்ந்து கொண்டே இருந்தது.
ஜிமெயில், கூகுள் மேப்ஸ், யூடியூப் என அவர்கள் தொட்டதெல்லாம் பொன்னாக மாறியது. கூகுள் அறிமுகம் செய்த ஒவ்வொரு தயாரிப்பும் சிறப்பாகவும், வேகமாகவும், பயனர்கள் உண்மையில் விரும்பியவையாகவும் இருந்தது. ஒரு கட்டத்தில் 2009ம் ஆண்டு வாக்கில், யாஹூ சர்ச் இன்ஜினையே கைவிட்டது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, பிங்கிடம் ஒப்படைத்தனர். இறுதியாக 2016ம் ஆண்டு யாஹூ நிறுவனம் அதன் உச்ச மதிப்பின் ஒரு பகுதியான 4.48 பில்லியன் டாலருக்கு Verizon நிறுவனத்திற்கு விற்கப்பட்டது.
கூகுள் எப்படி ஜெயித்தது: அந்த நிறுவனம் அடுத்து என்ன செய்யபோகிறோம் என்பதில் தெளிவாக இருந்தது. நீண்ட கால லாபத்தை மட்டும் கணக்கில் கொண்டு பயனர்களின் தேவையில் கவனம் செலுத்தியது. தைரியமான ரிஸ்க்குகளை அவர்கள் பல முறை எடுத்தார்கள். அவை எல்லாம் பொன்முட்டை இடும் வாத்தமாக அவர்களுக்கு மாறியது. ஆனால் யாஹூ நிறுவனம் குறுகிய காலத்தில் என்ன லாபம் கிடைக்கும் என்பதை மட்டும் மனதில் கொண்டு செயல்பட்டது. அதேபோல் ரிஸ்க் எடுக்க தயங்கியது.
"சேப் கேம்" மட்டுமே யாஹூ இறுதிவரை ஆடியது. இதுதான் யாஹூவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. கூகுளின் வெற்றிக்கு நீண்ட கால நோக்கம் மற்றும் புதுமையான கண்டுபிடிப்பு, ரிஸ்க் எடுக்க தயங்காதது போன்றவை காரணமாக அமைந்தத. கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு தான் இன்றைக்கு மொபைல் தொழில் நுட்பத்தையே ஆட்டிப்படைக்கிறது.ஆண்ட்ராய்டு விஞ்சும் தொழில் நுட்பங்கள் இன்னும் வரவில்லை.. என்னதான் ஆப்பிள் இருந்தாலும் பணக்காரர்களின் காஸ்டலி செல்லமாக மட்டுமே இன்று வரை இயங்கி வருகிறது.
கூகுள் தோற்கவே இல்லையா: கூகுளும் சில இடங்களில் தோற்றுள்ளது. கூகுள் பிளஸ் என்ற சமூக வலைதளத்தை பேஸ்புக் போல் உருவாக்கியது.ஆனால் அவர்களால் பேஸ்புக்கிற்கு ஈடுகொடுத்து செயல்படமுடியவில்லை.. அதில் அவர்கள் தோற்றுப்போனார்கள்.. இன்றைக்கு தொழில்நுட்ப உலகில் கூகுள் முதல் இடத்திலும் பேஸ்புக் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

Related Post