சட்ட விரோதமாக நுழைய முயன்ற 1.49 லட்சம் பேர் கைது..!

post-img

கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இது தொடர்பான புள்ளி விவரத்தை அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.

 

அதன்படி 2019 பிப்ரவரி முதல் 2023 மார்ச் வரை காலக்கட்டத்தில் சுமார் 1.49 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைய முயன்று காவல்துறையிடம் பிடிபட்டுள்ளனர். இது  அபாயமான சூழலை சந்தித்தாலும் பரவாயில்லை என இந்தியர்கள் மத்தியில் அமெரிக்காவில் வாழ வேண்டும் என்ற மோகம் குறையவில்லை என்பதையே காட்டுகிறது.

 

அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி, 2022 ஜனவரி மாதம் 5,459 இந்தியர்கள் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து சிக்கியுள்ளனர். இவர்களில் 708 பேர் அமெரிக்க-கனடா எல்லையில் பிடிபட்டுள்ளனர்.

 

2023 ஜனவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 35.9 சதவீதம் உயர்ந்து 7,421 பேர் என அதிகரித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் அமெரிக்க-கனடா எல்லையில் 2,478 இந்தியர்கள் பிடிபட்டனர். ஒட்டுமொத்தமாக பார்க்கையில் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்று பிடிபட்டவர்களில் 2 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர். பிடிபட்டவர்களில் குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் என புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதில் பல குடும்பங்கள் அபாயகரமான முறையில் எல்லைப் பகுதிகளுக்குள் நுழைய முயன்று உயிரை பறிகொடுத்துள்ளனர்.

 

 

இருப்பினும் அமெரிக்காவிற்குள் இந்தியர்கள் நுழைவதற்கு தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். அமெரிக்க எல்லை கண்காணிப்பு படையினரிடம் அடைக்கலம் தேடி நுழைய முயன்று 9,648 இந்தியர்கள் சிக்கியுள்ளனர். இதில் 2,289 பேர் அமெரிக்க-கனடா எல்லையில் பிடிபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Related Post