ஓடாதீங்க.. மதுரை எய்ம்ஸ் குறித்த டிஆர் பாலு பேச்சுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி!

post-img

நாடாளுமன்றத்தில் இன்று 3வது நாளாக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து வருகிறது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது அவர் மதுரை எய்ம்ஸ் பற்றி கூறினார். மதுரையில் எய்ம்ஸ் பணி கட்டுவதில் மத்திய அரசு சுணக்கம் காட்டுவதாக திமுக எம்பி டிஆர் பாலு ஏற்கனவே பேசியிருந்தார். மேலும் அதற்கான கடன் திட்டம் பற்றியும் அவர் விமர்சனம் செய்து இருந்தார். அதற்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசினார்.

அப்போது நிர்மலா சீதாராமன் கூறியதாவது: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ரூ.1977 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஜெய்க்காவின் ரூ.1,627 கோடி கடனுதவியுடன் மருத்துவமனை கட்டப்பட உள்ளது. இது மத்திய அரசின் கடன் திட்டமாகும். இதில் தமிழக அரசுக்கு எந்த கடனும் இல்லை. அதனால தயவு செய்து மதுரை எய்ம்ஸ் குறித்து தவறான தகவலை பரப்ப வேண்டாம்.

பொதுவாக 750 படுக்கைகள்தான் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் இருக்கின்றன. ஆனால் தமிழ்நாடு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 900 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளது. கூடுதலாக 150 படுக்கைகள் ஏற்படுத்தப்பட உள்ளது. தொற்று வியாதி வார்டு பிரிவில் இந்த 150 படுக்கைகள் அமைய உள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 50 மாணவர்கள் ஏப்ரல் 2022 முதல் படித்து வருகின்றனர்'' என்றார்.

இந்த வேளையில் திமுகவினர் மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டப்படும் என்பதை கேட்கும் வகையில் ‛‛எப்போது... எப்போது... எப்போது?'' என கோஷமிட்டு வெளிநடப்பு செய்தனர். அப்போது ஓடாதீங்க.. ஓடாதீங்க.. நில்லுங்க.. நான் தமிழ்நாடு பற்றி நிறைய பேச வேண்டும். வெளியே போனாலும் டிவியில பாருங்க என நிர்மலா சீதாராமன் திமுகவினர கிண்டல் செய்தார்.

அதன்பிறகும் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் பேசியபோது, ‛‛மதுரை எய்ம்ஸ்க்கான நிதி ரூ.1,200 கோடியில் இருந்து ரூ.1,977 கோடியாக பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்டது. ஆனால் மாநில அரசு நிலம் கையகப்படுத்தும் பணியை தாமதப்படுத்தியது. நிலம் கையகப்படுத்தும் பணி தாமதப்படுத்தியதன் காரணமாக பட்ஜெட் தொகை ரூ.1,600 கோடியை கடந்துள்ளது. இதனால் பணி தாமதத்துக்கு மாநில அரசு தான் பொறுப்பேற்க வேண்டுமே தவிர மத்திய அரசு மீது பழி போடக்கூடாது. ஏனென்றால் கோவிட் சமயத்தில் அங்கு ஆய்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது'' என்றார்.


Related Post