விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து 6 மாத காலத்துக்கு தற்காலிகமாக ஆதவ் அர்ஜுனா நீக்கப்பட்டிருந்தாலும் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மாநில நிர்வாகிகள் மற்றும் 30 மாவட்ட செயலாளர்கள் தொடர்ச்சியான தொடர்பில் இருந்து வருகிறார்கள்.
இது குறித்து சிறுத்தைகள் தரப்பில் விசாரித்தபோது, ''திமுகவின் அழுத்தத்துக்கும், ஆதவ் அட்ஜுனா தொடர்பான சர்ச்சைகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தான் எங்கள் தலைவர் திருமாவளவன், ஆதவ்வை தற்காலிகமாக நீக்கினார்.
திமுகவை திருப்திப்படுத்த வேண்டும் என்பதைத் தாண்டி ஆதவ் மீதான எந்த கோபமும் எங்கள் தலைவருக்கோ நிர்வாகிகளுக்கோ இல்லை. திமுக ஆதரவாளர்களாக சிலர் இருக்கின்றனர். அவர்களைப்பற்றி தலைவர் கவலைப்படுவதில்லை. இன்னும் சொல்லப்போனால், 2026- தேர்தலில் எங்கள் வேட்பாளர்களுக்கான நிதி ஆதாரமே ஆதவ் தான்.
அப்படியிருக்க, அவரை கட்சியிலிருந்து முற்றிலும் துடைத்தெறிந்து விட முடியாது. இந்த 6 மாத காலமும் சிறுத்தைகளுக்கான அடிப்படை கட்டமைப்ப்புகளை வலிமைப்படும் தேர்தல் யுக்திகளுக்கான பணிகளை சீக்ரெட்டாக செய்து வருமாறு அவருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதனால், வெளித் தோற்றத்துக்குத்தான் ஆதவ் நீக்கப்பட்டுள்ளாரே தவிர, புறத்தில் அவர் கட்சி பணிகளை கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார். அதனால் தான் நிர்வாகிகளும் அவருடன் தொடர்பில் இருந்து வருகிறார்கள்.
ஆதவ்வை முற்றிலுமாக நீக்கினால் எங்கள் கட்சிக்குத்தான் இழப்பே தவிர, ஆதவ்வுக்கு இல்லை. ஏனெனில், அவருக்கு அதிமுக, பாஜக, த.வெ.க. ஆகிய 3 கட்சிகளிலும் வாய்ப்புகள் உண்டு. அதனால் அவரை இழக்க எங்கள் தலைவர் விரும்ப மாட்டார்'' என்று ஆதவ் அர்ஜுனாவை சுற்றி கட்சியில் நடக்கும் விசயங்களை பகிர்ந்து கொண்டனர்.
பின்னணி: அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில் கலந்துகொள்வதற்கு முன்பு, கேரவனில் விஜய்யும், ஆதவ் அர்ஜுனாவும் ஒத்திகைப் பார்த்தனர் என்கிற புதிய தகவல் ஒன்று நமக்கு கிடைத்திருக்கிறது. விகடன் குழுமமும், ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன் அமைப்பும் இணைந்து, எல்லோருக்கு மான தலைவர் அம்பேத்கர் எனும் நூலை வெளியிட்டனர்.
இதற்கான விழா, கடந்த 6-ந்தேதி சென்னை வர்த்தக மையத்தில் நடந்தது. நூலை விஜய் வெளியிட்டார். இந்த நிகழ்வில், விஜய்யும் ஆதவ்வும் திமுகவுக்கு எதிராக பேசியவைகள் தமிழக அரசியலில் பரபரப்பையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தின. இந்த அதிர்வுகள் இன்னமும் நீடித்தபடி இருக்கின்றன. திமுக தலைமைக்கு ஏற்பட்ட கோபம், ஆதவ் அர்ஜுனாவை விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்ய வைத்திருக்கிறது.
இந்த அளவுக்கு அதிர்வுகளை ஏற்படுத்தி தற்போது சற்று ஓய்ந்திருக்கும் நிலையில், சில புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. நூல் வெளியீட்டு விழா, மாலை 5 மணிக்கு தொடங்கும் என சிறப்பு அழைப்பிதழில் (வி.ஐ.பி. பாஸ்) சொல்லப்பட்டி ருந்தாலும் மாலை 6 மணிக்குத் தான் நிகழ்ச்சித் தொடங்கியது. ஆனால், நிகழ்ச்சி தொடங்குவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்னதாகவே ஸ்பாட்டுக்கு வந்து விட்டார் விஜய். மற்ற விருந்தினர்களும் வந்துவிட்டனர்.
விஜய் தவிர்த்த மற்ற விருந்தினர்கள், ஸ்டேஜ்ஜுக்கு பின்புறமிருந்த ஓய்வு அறையில் காத்திருந்தனர். அதேசமயம், விஜய் மட்டும் கேரவனில் இருந்தார். அவருக்காக, தனி கேரவன் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் ஆதவ் அர்ஜுனா. அந்த கேரவனில், விஜய்யும் ஆதவ்வும் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். விழாவை திருமா தவிர்த்த விசயம் பிரதானமாக அவர்களின் பேச்சில் வெளிப்பட்டிருக்கிறது. அப்போது, இந்த நிகழ்ச்சியை திருமா தவிர்த்துள்ளதன் பின்னணியை ஏற்கனவே விஜய்யிடம் ஆதவ் சொல்லியிருந்தாலும் மீண்டும் அதே பின்னணியை சொல்லியிருக்கிறார் ஆதவ்.
அதாவது, உங்களை கண்டு பயப்படுகிறார் உதயநிதி. நீங்களும் நாங்களும் (சிறுத்தைகள்) இந்த விழா மூலம் ஒன்றாக சேர்ந்துவிடுவோமோ என்கிற பயம். அதான் அவர்களை பதட்டமடைய வைத்திருக்கிறது. கட்சியில் கட்சிக்காக உழைச்சு பதவி கிடைச்சிருந்தா உதயநிதிக்கு பயம் வந்திருக்காது. நேரடியாக உயர்ந்த பதவி கிடைக்கும் போதுதான், எதிரிகளை பார்த்தால் பயம் வரும், என்றெல்லாம் பேசியதாக தெரிகிறது.