காலில் தட்டுப்பட்ட இரும்பு! புதையல் இல்ல.. ராக்கெட் லாஞ்சராம்! திருவள்ளூரில் ஷாக்

post-img

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே காப்புக்காட்டில் ராக்கெட் லாஞ்சர் ஒன்று கண்டெடுக்கப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரியபாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற பவானி அம்மன் திருக்கோயில் இருக்கிறது. இதற்கு பக்கத்தில்தான் மெய்யூர் காப்புக்காடு இருக்கிறது. இந்த பகுதியில் இன்று காலை ஆடு மேய்துக்கொண்டிருந்த நபர் தரையில் வித்தியாசமான இரும்புபோன்ற பொருள் இருப்பதை பார்த்திருக்கிறார். அதை தோண்டி எடுக்க முயன்றபோதுதான் அது ராக்கெட் குண்டு என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பூமியில் புதைந்து இருப்பது ராக்கெட் லாஞ்சர் என்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து அந்த பகுதியை சுற்றி மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து, லாஞ்சர் பக்கத்தில் பொதுமக்கள் செல்லாதவாறு கண்காணித்து வருகின்றனர். இந்த வகை ராக்கெட் லாஞ்சர்கள் பொதுவாக ஆர்பிஜி என்று அழைக்கப்படுகிறது. இது ராணுவ டாங்கிகளை தாக்குவதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதை கொண்டு தாக்கினால் 600-750 மி.மீ அடர்த்தி கொண்ட எக்கு டாங்கிகளையும் துளைத்து நாசமாக்கிவிடும். சுமார் 100-200 மீ வரை இதை பயன்படுத்த முடியும். இந்த அளவுக்கு சக்தி வாய்ந்த ராக்கெட் லாஞ்சர் இந்த பகுதிக்கு எப்படி வந்தது என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர். இந்த பகுதி ஆங்கிலேயர் காலத்தில் போர் பயிற்சி பெறும் இடமாக இருந்ததாகவும், எனவே இந்த இடத்தில் ராக்கெட் லாஞ்சர் வந்திருக்கலாம் என்றும் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு இதேபோல டிசம்பர் மாதம் 4ம் தேதியன்று திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாளந்தூர் கிராமத்தில் ஒரு ராக்கெட் லாஞ்சர் கண்டெடுக்கப்பட்டது. இங்குள்ள காப்புக்காட்டில் 100 நாள் வேலையில் ஈடுபட்டிருந்த பெண்கள் நிலத்தை சமன்படுத்திக்கொண்டிருந்தபோது திடீரென இரும்பு போன்ற பொருள் தட்டுப்பட்டிருக்கிறது. எனவே கடபாரை கொண்டு அதை அவர்கள் தோண்ட முயன்றபோது, அந்த இரும்பு பொருள் ராக்கெட் லாஞ்சர் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.


இதனையடுத்து அந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போலீசார் தீவிரமாக சோதனை செய்து அந்த பகுதியில் வேறு எந்த ராக்கெட் லாஞ்சரும் இல்லை என்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து ஓராண்டு கழித்து மற்றொரு பகுதியில் ராக்கெட் லாஞ்சர் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாத செயலுக்காக இதனை வேறு யாரேனும் மறைத்து வைத்திருக்கிறார்களா? என்கிற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Related Post