நியூயார்க்: விண்வெளி துறையில் அதிக ஆர்வம் கொண்டிருக்கும் பொறியாளர் நீங்கள் எனில், உங்களிடமிருந்து புதிய கண்டுபிடிப்புகளை நாசா எதிர்ப்பார்க்கிறது. குறிப்பாக ஆர்டெமிஸ் திட்டத்திற்கு பங்களிப்பின் மூலம் ரூ.16 லட்சம் வரை உங்களுக்கு கொடுக்க நாசா தயாராக இருக்கிறது.
ஆர்டெமிஸ் திட்டம்: விண்வெளி மர்மங்களும், அதிசயங்களும் நிறைந்த பகுதியாகும். இதில் மனிதர்களுக்கு பயன்படுவது என்னென்ன? என்பது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக நிலவு மீதான ஆய்வு சமீபத்தில் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. இதற்கு ஆர்டெமிஸ் எனும் திட்டத்தை நாசா செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்படி, மனிதர்கள் நிலவில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்வார்கள். ஆனால் இதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன.
சாவல்கள்: குறிப்பாக நிலவில் மனிதர்கள் ஆய்வில் ஈடுபடும்போது அவர்களுக்கு விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் நிலவில் ஈர்ப்பு விசை மிக குறைவு. பூமியில் செய்வதை போல நிலவில் நம்மால் பணி செய்ய முடியாது. அதற்காக சிறப்பான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இருந்தாலும் எதிர்பாராமல் விபத்துகள் நடக்கலாம். எனவே, இந்த விபத்துகளிலிருந்து விண்வெளி வீரர்களை காப்பாற்றவும், அவர்களை விபத்து நடந்த பகுதியிலிருந்து மீட்டெடுக்கவும் புதிய டெக்னாலஜி அவசியமாகும்.
புதிய டெக்னாலஜி: இந்த டெக்னாலஜியை கண்டுபிடிப்பவர்களுக்கு ரூ.16 லட்சம் வரை அளிக்கப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது. லூனார் மீட்பு சிஸ்டம் பகுதிக்கு அடிப்பட்ட விண்வெளி வீரர்களை கொண்டு வர வேண்டும். நிலவின் மேற்பரப்பு மிகவும் கரடு முரடாக இருக்கும். எனவே, இதை எப்படி சாத்தியப்படுத்துவது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. இதற்கான விடையை பொறியியல் திறமைசாலிகள் தங்கள் கண்டுபிடிப்புகள் மூலம் கொடுக்க வேண்டும்.
நிலவின் தென் துருவ பகுதியில்தான் ஆர்டெமிஸ் திட்டத்தின் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இங்கு அமைக்கப்படும் லுனார் மீட்பு சிஸ்டம் பகுதியிலிருந்து சுமார் 2 கி.மீ சுற்றளவு பகுதிகளில்தான் விண்வெளி வீரர்கள் ஆய்வுகளை செய்வார்கள். இந்த 2 கி.மீ தொலைவு என்பது ஏராளமான பள்ளம், மேடுகளை கொண்டிருக்கும். இந்த பகுதியில்தான் மீட்பு பணிகளுக்கு வாகனம் தேவை.
விண்வெளி துறையில் ஆர்வம் இருப்பவர்கள், விண்வெளியை நன்கு புரிந்து கொண்ட பொறியியல் திறமைசாலிகளுக்கு இந்த வாய்ப்பு ஒரு வரப்பிரசாதம் போன்றதாகும். உங்கள் ஐடியாவை நாசா ஏற்றுக்கொண்டால் ரூ.37 லட்சம் வரை ஜாக்பாட் தொகையை நாசா அளிக்கும்.
ஏன் ஆர்டெமிஸ் திட்டம் முக்கியம்: பூமிக்கு மாற்றாக வேறு ஒரு கிரகத்தை விஞ்ஞானிகள் தேடி வருகின்றனர். குறிப்பாக இங்கிருந்து 22.5 கோடி கி.மீ தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு அவர்கள் பிளான் செய்து வருகிறார்கள். ஆனால் பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு போவதை விட, நிலவிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு செல்வது கொஞ்சம் எளிதானது. ஆனால், இதற்காக நிலவில் மிகப்பெரிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியது அவசியமாகும். இந்த கட்டமைப்புகளுக்காகதான் ஆர்டெமிஸ் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
Weather Data Source: Wettervorhersage 21 tage