சென்னை: தென்காசியில் இருந்து வாரணாசிக்கு, 'தீபாவளி கங்கா ஸ்நான யாத்திரை' என்ற பெயரில் பாரத் கவுரவ் யாத்திரை ரயில் நவம்பர் 9ஆம் தேதி இயக்கப்படுகிறது. காசி யாத்திரை செல்ல வேண்டும் என்பது பலருக்கும் விருப்பம் இருக்கும் வாழ்நாளில் ஒருமுறையாவது காசி விஸ்வநாதரை தரிசிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு பாரத் கவுரவ் யாத்திரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
தனதிரயோதசி தொடங்கி தீபாவளி, அமாவாசை நாட்களில் காசியில் தங்கமயமாய் காட்சி தரும் அன்னபூரணியை தரிசிக்க வாழ்நாள் முழுவதும் அள்ள அள்ள குறையாத அன்னமும் செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தீபாவளியன்று காசியில் அன்ன கூடம் என்ற நிகழ்வில் பலவித உணவுகள், பலகாரங்கள் வைத்து பூஜை செய்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படும். மறுநாள் லட்டு தேரில் அன்னபூரணி ஊர்வலம் வருவதைக்காண கண் கோடி வேண்டும். எண்ணற்ற லட்டுகளால் உருவான தேரில் உள்ள லட்டுக்களை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுப்பார்கள்.
தீபாவளி நாளில் காசியில் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஐஆர்சிடிசியின் பாரத் கவுரவ் சுற்றுலா யாத்திரை சார்பில் 'தீபாவளி கங்கா ஸ்நான யாத்திரை' ரயில் நவம்பர் 9ஆம் தேதி இயக்கப்பட உள்ளது. வரும் நவம்பர் 9ம் தேதி அதிகாலை 3.50 மணிக்கு தென்காசியில் இருந்து புறப்படும் இந்த ரயில், தஞ்சாவூர், சிதம்பரம், செங்கல்பட்டு, சென்னை எழும்பூர், விஜயவாடா, பிரயாக்ராஜ் வழியாக, நவம்பர் 11ம் தேதி இரவு 10.30 மணிக்கு வாரணாசியை அடையும். பின்னர் நவம்பர் 13ஆம் தேதி இரவு 11.00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, கயா, சம்பல்பூர், விஜயவாடா, சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், ராமேஸ்வரம் வழியாக, 17ம் தேதி இரவு தென்காசியை சென்றடைகிறது.
இந்த ரயிலில் எகானமி வகுப்பிற்கு ஒரு நபருக்கு ரூ. 16,850 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் கம்ஃபர்ட் வகுப்பைத் தேர்ந்தெடுக்கும் நபர்கள் ரூ. 30,500 செலுத்த வேண்டும். இந்த ரயில் பயணம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், கயாவில் உள்ள விஷ்ணு பாதை கோயில் மற்றும் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயில் போன்ற புனித தலங்களை உள்ளடக்கி உள்ளது.
குற்றாலத்தில் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் தென் மண்டல பொது மேலாளர் ராஜலிங்கம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், இந்த ரயிலில் மொத்தம் 14 பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன. அதில் படுக்கை வசதியுடன் கூடிய பெட்டிகள் 8-ம், குளிர்சாதன வசதியுடன் கூடிய பெட்டிகள் 3ம், உணவுக்கூட பெட்டி ஒன்றும் அடங்கும். படுக்கை வசதியுடன் கூடிய பெட்டியில் பயணம் செய்வதற்கு ரூ.16,850 கட்டணம் செலுத்த வேண்டும். குளிர்சாதன வசதியுடன் கூடிய பெட்டியில் பயணிக்க ரூ.30,500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் பயணம் செய்பவர்களுக்கு காப்பீடு வசதியும் உள்ளது. எல்.டி.சி. சான்றும் வழங்கப்படும். புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வதால் முதியோர்களுக்கு வசதியாக இந்த ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தீபாவளி அன்று கங்கையில் புனித நீராடும் வகையில் வசதி செய்யப்படுகிறது.
தீபாவளி காசி யாத்திரை செல்ல விரும்புவோர் ஐஆர்சிடிசி இணையதள முகவரியிலும், மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள ஐஆர்சிடிசி அலுவலகங்களிலும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த ரயிலில் ஐ.ஆர்.சி.டி.சி. ஊழியர்கள் 3 பேர் இருப்பார்கள். ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு பொறுப்பாளர் இருப்பார். சமையல் செய்ய கேஸ் சிலிண்டர் கிடையாது. மின்சார அடுப்பு பயன்படுத்தப்படுகிறது. முழுக்க முழுக்க பாதுகாப்பு நிறைந்தது. வெளியிடங்களை சுற்றி பார்க்கும்போது குளிர்சாதன வசதி உள்ள மற்றும் இல்லாத பஸ் வசதியும், தங்குமிட வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அவசர மருத்துவ சிகிச்சை வசதியும் உண்டு. தேவையான இடங்களில் ரயில்வே டாக்டர்கள் மற்றும் அரசு டாக்டர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தென்காசியில் புறப்படும் இந்த ரயிலில் ராஜபாளையம், சிவகாசி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் ஏறிக்கொள்வதற்கு வசதி செய்யப்பட்டு உள்ளது என்றும் தென் மண்டல பொது மேலாளர் ராஜலிங்கம் தெரிவித்தார்.