கவரப்பேட்டை ரயில் விபத்து..உறுதிசெய்யப்பட்ட குற்றவாளிகள்! விரைவில் வெளியாகும் அடையாளம்..டிஜிபி தகவல்

post-img

சென்னை: சென்னை அருகே கவரப்பேட்டையில் ரயில் விபத்து ஏற்பட்ட நிலையில் அது சதி செயல் என விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் கவரப்பேட்டை ரயில் விபத்துக்கு காரணமான குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும், சரியான பாதையில் விசாரணை செல்கிறது என கூறியுள்ளார் ரயில்வே டிஜிபி வன்னிய பெருமாள்.
மைசூர் - தர்பாங்க இடையே பாக்மதி வாராந்திர எக்ஸ்ப்ரஸ் ரயில் இயக்கப்படும் நிலையில், கடந்த 11ஆம் தேதி சுமார் 8 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சென்ற போது திடீரென விபத்து ஏற்பட்டது.

சிக்னல் கோளாறு காரணமாக லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மைசூர் தர்பங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ரயில் இன்ஜினில் இருந்து சுமார் 13 பெட்டிகள் தடம் புரண்டது.
தொடர்ந்து விபத்து குறிப்பு தகவல் அறிந்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் உடனடியாக மீட்பு பணிகளில் இறங்கினர். மேலும் காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் தன்னார்வலர்கள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்து நடந்த பகுதிக்கு அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களும் உடனடியாக களத்தில் இறங்கினர். சுமார் 3 மணி நேர மீட்பு பணிகளுக்கு பிறகு சுமார் 1400க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரும் முழுமையாக மீட்கப்பட்டனர்.
இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாத நிலையில் 19 பேர் காயம் அடைந்தனர். 16 பேருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில் மூன்று பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. ஒருவருக்கு தலைக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து விபத்து குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மனித தவறு காரணமா அல்லது தொழில்நுட்ப தவறு காரணமாக விபத்து ஏற்பட்டதா என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இது தொடர்பாக ரயில்வே பணியாளர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் விபத்து நடந்த பகுதியில் இன்று காலை ரயில்வே அதிகாரிகளுடன் தேசிய புலனாய்வு முகமை பிரிவு அதிகாரிகளும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். விசாரணையில் தண்டவாளத்தில் போல்ட்டுகள் கழற்றப்பட்டு இருப்பது அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக சிக்னல் மாறி விழுந்து இருக்கலாம் என அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
விபத்து என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில் தற்போது சதி வேலை காரணமா என்று கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விபத்து குறித்து பாக்மதி விரைவு ரயில் லோகோ பைலட், துணை லோகோ பைலட், கார்டு, பயணச்சீட்டு பரிசோதகர், ஏசி பெட்டி பணியாளர்கள், பான்ட்ரி அலுவலர்கள், பொன்னேரி மற்றும் கவரிப்பேட்டை ரயில் நிலைய அதிகாரிகள், விபத்து நடந்த பகுதியின் சிக்னல் பொறுப்பு அலுவலர் உள்ளிட்ட 13 பிரிவுகளை சேர்ந்த 40 ரயில்வே அலுவலர்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தெற்கு ரயில்வே பாதுகாப்பு துறை சம்மன் அனுப்பியது.
கடந்த புதன்கிழமை அவர்கள் 40 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் விபத்துக்கு காரணம் தொழில்நுட்ப கோளாறு இல்லை எனவும், நட்டு போல்ட்டு கழற்றப்பட்டது காரணம் என உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்திய ரயில்வே சட்டப்பிரிவு 150 கீழ் மேலும் ஒரு வழக்கு என மொத்தம் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த பிரிவின்படி ரயிலை கவிழ்க்க சதி என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரயில் கவிழ்ப்பில் தொடர்புடைய நபர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ரயில்வே போலீசார் கூறினர். இந்நிலையில் கவரப்பேட்டை ரயில் விபத்துக்கு காரணமான குற்றவாளிகளை நெருங்கி விட்டதாக கூறியுள்ளார் ரயில்வே டிஜிபி வன்னிய பெருமாள்.
இதுதொடர்பாக பேசிய அவர்," கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கிடைத்த தடயங்கள், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் கவரப்பேட்டை ரயில் விபத்துக்கு காரணமான குற்றவாளிகளை நெருங்கி விட்டோம். அனைவரிடமும் விசாரணை நிறைவு பெற்று சரியான பாதையில் வழக்கு சென்று கொண்டிருக்கிறது. குற்றவாளிகள் யார் என்ற தகவல் விரைவில் வெளியிடப்படும்" எனக் கூறியிருக்கிறார்.

Related Post