கோவை: கம்பி எண்ணும் அமைச்சர் என்னை பார்த்து பொறாமைப்படுகிறார். கேட்ட கேள்விக்கு பதில் வர வேண்டும். அதைவிட்டு சுற்றிசுற்றி வளைக்கிறதை இந்த ஜாமீன் அமைச்சர் விட்டு விட வேண்டும். என் மீது கேஸ் போடுவாரா? தைரியம் இருந்தால் என் மீது கேஸ் போடுயா பார்க்கலாம். சரியான அப்பா - அம்மாவுக்கு பிறந்து இருந்தால் என் மீது கேஸ் போடுயா பார்க்கலாம்? என்று ஒருமையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சனம் செய்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதானி விவகாரம் தொரடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை ‛ஜாமீன் அமைச்சர்’ என்று விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். மேலும் அந்த அறிக்கையில் அதானி விவகாரம் தொடர்பாக கேள்விகள் கேட்டு விமர்சனம் செய்திருந்தார்.
அந்த அறிக்கையில், ‛‛முக அரசின் தவறுகளைக் கேள்வி கேட்பவர்களை, 'வழக்கு தொடருவோம்' என்ற பூச்சாண்டி காட்டி மிரட்டும் அதே காலாவதியான தொனியில், தமிழக மின்சார வாரியம், அதானி நிறுவனத்துக்குச் செலுத்திய தொகை குறித்த கேள்விக்குப் பதிலளித்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
ஒரு வகையில், அதானி நிறுவனத்துக்கு எந்தக் கட்டணமும் செலுத்தவில்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முற்படாமல், கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து தமிழக மின்சார வாரியத்துடனான வழக்கு காரணமாக அதானி நிறுவனத்துக்கு வழங்கப்படாமல் இருந்த கட்டணத்தை, திமுக ஆட்சியில் வழங்கியுள்ளதை ஒப்புக்கொண்ட ஜாமீன் அமைச்சரைப் பாராட்டியே தீர வேண்டும்.
அதானி நிறுவனத்துடன் திமுக அரசு எந்த ஒப்பந்தமும் போடவில்லை என்று திரும்பத் திரும்பக் கூறும் அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது வார்த்தை விளையாட்டின் மூலம், அதானி நிறுவனத்துடன் தமிழக மின்சார வாரியத்துடனான ஒப்பந்தங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதை மறைக்க முயற்சிக்கிறார். ஆனால், அவரது முயற்சிகள் பலிக்கவில்லை.
அதானி நிறுவனத்திடம் தமிழக மின்சார வாரியம் தொடர்ந்து உயர்த்தப்பட்ட விலையான ரூ.7.01 விலையிலேயே மின்சாரம் வாங்கிக் கொண்டு, அதற்காக, கடந்த நிதியாண்டில் ரூ.99 கோடி கூடுதல் கட்டணம் பெற்றிருப்பதாக, அதானி நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும்போது, எந்த அடிப்படையில், ரூ.5.10 க்கு ஒரு யூனிட் மின்சாரம் என்று திமுக ஆட்சியில் கொள்முதல் செய்வதாகக் குறிப்பிடுகிறார் அமைச்சர்?’’ என்று சாடியிருந்தார்.
அதற்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்து கொடுத்தார். இதுதொடர்பாக செந்தில் பாலாஜி, ‛‛மின்சார கொள்முதல் விசாரணை தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளோம். அந்த அறிக்கையை படித்த பிறகும் புரிந்து கொள்ளாமல் ஒருவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். தெரிந்தவர்களிடம் கேட்டு புரிந்து கொள்ளும் பக்குவம் கூட அவருக்கு இல்லை. 7 ரூபாய் ஒரு காசு என்பது அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தம். அதுதொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஜாமீன் அமைச்சர் என என்னை சொல்லி இருக்கிறார். பாஜகவில் எத்தனை பேர் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்கள் தெரியுமா? என்று கேட்டு இருந்தார்.
இதற்கு இன்று அண்ணாமலை பதிலடி கொடுத்தார். இன்று கோவையில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செந்தில் பாலாஜியை ஒருமையில் பேசி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதுதொடர்பாக அண்ணாமலை கூறியதாவது: ‛‛கம்பி எண்ணும் அமைச்சர் என்னை பார்த்து பொறாமைப்படுகிறார். கேட்ட கேள்விக்கு பதில் வர வேண்டும். அதானிக்கு கொடுத்தியா இல்லையா? கொடுத்தேன் என்று ஒப்புக்கொள்ளுங்கள். அதைவிட்டு சுற்றிசுற்றி வளைக்கிறதை இந்த ஜாமீன் அமைச்சர் விட்டு விட வேண்டும். என் மீது கேஸ் போடுவாரா? தைரியம் இருந்தால் என் மீது கேஸ் போடுயா பார்க்கலாம். சரியான அப்பா - அம்மாவுக்கு பிறந்து இருந்தால் என் மீது கேஸ் போடுயா பார்க்கலாம்? நான் தெளிவாக கேட்கிறேன். தமிழ்நாடு அமைச்சரவையில் ஒரு மாற்றத்தை பார்க்க வேண்டும்.
ஜெயிலில் இருந்த அமைச்சர் சொல்கிற அளவுக்கு என் அரசியல் அந்த அளவுக்கு மோசமாகிவிட்டதா? சரியான ஆளாக இருந்தால் என் மீது கேஸ் போடுயா பார்க்கலாம். நீ எங்கே கூட்டிட்டு போகிறார் என்று பார்த்து விடலாம். போலீஸ் உன் கையில் இருக்கிறது. முதலமைச்சர் உனக்கு தான் நெருங்கிய நண்பர். நீதான் அவரது பையன் மாதிரி என்று சொல்கிறீயே. அவர் காலில் விழுந்து டிஜிபியிடம் கேஸ் போட சொல்லு பார்க்கலாம். நியாயத்தை பேசினால் இந்த ஊரில் மிரட்டலா? அதனால் தான் அந்த அறிக்கையை ஸ்ட்டாங்காக கொடுத்தேன். நான் மரியாதை கொடுக்கிற ஆள். உருட்டல் மிரட்டலுக்கு பயந்தவன் நான் இல்லை. அப்படி இருந்தால் ஊரில் இருந்து ஆடு மேய்த்து கொண்டிருப்பேன். உங்கள் மத்தியில் அரசியல் செய்ய மாட்டேன். உங்களை ஓடவிட வேண்டும் என்பதற்காக தான் அரசியலுக்கு வந்துள்ளேன்’’ என்று ஒருமையில் கடுமையாக விமர்சனம் செய்தார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage